செய்தியாளர்: ராஜ்குமார்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக உள்ளது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்து பேசிய அவர்,
“ஜார்க்கண்ட் மாநிலத்தில் I.N.D.I.A. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. எங்களது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர், சகோதரி பிரியங்கா காந்தி இரண்டரை லட்சம் வாக்குகளுக்கும் அதிகமாக முன்னிலை வகிக்கின்றார். கர்நாடகா மாநிலத்திலும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கின்றது.
மகாராஷ்டிராவில் ஒரு பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது, முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி ஒரு தகவலை சொல்லி இருக்கின்றார். பேலட் பேப்பரை சரியாக கணக்கெடுத்தாலே தேர்தல் வாக்கு சதவீதம் தெரிந்துவிடும். ஆனால் இரண்டு தினங்கள் கழித்து 6 சதவீதம் வாக்குகள் அதிகமாக பதிவுவாகி உள்ளதாக தெரிவித்திருப்பது சந்தேகத்தை எழுப்புகின்றது. இன்னும் இரண்டு நாட்களில் இதுகுறித்து ஆய்வு செய்து பத்திரிகையாளர்கள் மத்தியில் உண்மை நிலவரம் தெரிவிக்கப்படும்.
மகாராஷ்டிராவில் அதானியின் பெரும்பலம், மதவாத பிளவு சக்தி என எதையெல்லாம் குறுக்கு வழியில் கையாள முடியுமோ அதை எல்லாம் பாஜக கையாண்டு இருக்கின்றது. மகாராஷ்டிராவில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆய்வு மேற்கொள்வோம். பாஜக கொடுத்த எந்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கின்றார்கள்? பெட்ரோல் டீசல் விலையை குறைப்பேன் என்றார்கள்... நிறைவேற்றி உள்ளார்களா?
இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றுவோம் என தெரிவித்தார்கள்.. ஆனால் மாற்றினார்களா? பாஜக சொல்லாத ஒரு வாக்குறுதி நிறைவேற்றி உள்ளார்கள். அது அதானியை பெரும் பணக்காரர் ஆக்கியுள்ளது. எல்லா பொதுத் துறை நிறுவனங்களையும் குறிப்பாக கப்பல், மின்சாரம் என அனைத்தையும் அதானிக்கு கொடுப்பதுதான் அவர்கள் நிறைவேற்றியுள்ள வாக்குறுதி” என்றார்.