தமிழ்நாடு

மகாபாரதத்தை இழிவுபடுத்தினார்: கமல் மீது மீண்டும் வழக்கு

மகாபாரதத்தை இழிவுபடுத்தினார்: கமல் மீது மீண்டும் வழக்கு

webteam

இந்து மத இதிகாச நூலான மகாபாரதத்தை இழிவுபடுத்திப் பேசியதாக நடிகர் கமல்ஹாசன் மீது கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கமல் வெளியிட்டதாக இந்து மக்கள் கட்சியினர் புகார் கூறியுள்ளனர். இதையடுத்து, கமலஹாசன் மீது, கும்பகோணம் 2 வது கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பான மனுவை இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பாலா தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் சூதாட்டத்தை ஊக்குவிப்பது போன்றும், பெண்களை வைத்து சூதாடுவதை அங்கீகரிப்பது போன்றும் மகாபாரத நூலால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுவது போலவும் கமல்ஹாசன் பேசியதாக கூறப்பட்டுள்ளது. கமல்ஹாசனுக்கு அபராதம் விதித்து, அதிகபட்ச தண்டனை வழங்குமாறு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதே குற்றச்சாட்டில், நெல்லை மாவட்டம் வள்ளியூரிலும் கமல்ஹாசன் மீது ஏற்கனவே, வழக்கு தொடரப்பட்டுள்ளது. புதிய தலைமுறையின் அக்னிபரிட்சை நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசனிடம், பெண்கள் மீதான அத்துமீறல்கள் அதிகரிப்பது குறித்து கேட்டபோது, பெண்ணை வைத்து சூதாடிய கதை இடம் பெறும் மகாபாரதத்தை மகிழ்வுடன் படிக்கும் நிலை உள்ளதைக் குறிப்பிட்டுப் பேசினார்.