சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு செலுத்த வைக்கப்பட்டிருந்த 29 ரெம்டெசிவர் மருந்து பாட்டில்கள் மாயம். திருடப்பட்டதா என மருத்துவர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்ற நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து செலுத்தப்படுகிறது. அதற்காக நேற்றைய தினம் 900 மருந்து பாட்டல்களை அரசு, சேலம் அரசு மருத்துவமனைக்கு வழங்கி உள்ளது.
இன்றைய தினம் சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்கு செலுத்துவதற்காக வழங்கப்பட்ட ரெம்டெசிவர் மருந்து பாட்டல்களில் 29 மருந்து பாட்டில்கள் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் முருகேசனுக்கு தகவல் கொடுக்கவே, அவர் சேலம் மாநகர காவல்துறையில் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மருத்துவமனை காவல் நிலையத்தினர் இதுதொடர்பாக விசாரணையை தொடங்கி உள்ளனர். முதல்கட்டமாக கோவிட் வார்டில் பணிபுரியும் மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்து கையாளும் அலுவலர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொரோனா சிகிச்சை பிரிவில் வெளியில் இருந்து வந்தவர்கள் யாரேனும் எடுத்து சென்றனரா என்ன கோணத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து வருகின்றனர். இதற்கிடையில், சேலம் அழகாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஊழியரான, தருமபுரியை சேர்ந்த பிரசாந்த் (24) என்பவர், தனது தாத்தாவுக்கு வாங்கிய இரண்டு ரெம்டெசிவர் மருந்தில் ஒன்றை காயத்ரி என்ற பெண்ணுக்கு அதிக விலைக்கு விற்றுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் சூரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் 29 ரெம்டெசிவர் மருந்து மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.