தமிழ்நாடு

“கோலத்தில் சொன்ன கருத்து அலங்கோலமாக இருந்ததால் கைது” - மாஃபா பாண்டியராஜன்

“கோலத்தில் சொன்ன கருத்து அலங்கோலமாக இருந்ததால் கைது” - மாஃபா பாண்டியராஜன்

webteam

கோலம் போட்டதிற்காக யாரும் கைது செய்யப்படவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாணவர்களும் அதிகளவில் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சென்னையில் இன்று காலை 5 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 7 பேர் பெசன்ட் நகர் பகுதியில் வித்தியாசமான முறையில் போராட்டம் செய்தனர். அதாவது சாலையில் கோலம் போட்டு அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அவர்கள் தங்கள் கோலத்தில் குடியுரிமைச் சட்டத் திருத்தம் மற்றும் என்ஆர்சிக்கு எதிராக வாசகங்களை எழுதி இருந்தனர். அதன்படி நோ என்ஆர்சி போன்ற வசனங்களை எழுதி இருந்தனர். இதைத்தொடர்ந்து கோலம் போட்டு போராட்டம் நடத்திய பெண்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மாஃபா பாண்டியராஜன், “கோலம் போட்டதற்காக யாரும் கைது செய்யப்படவில்லை. கோலத்தில் சொன்ன கருத்துகள் அலங்கோலமாக இருந்தன. அவை சட்டத்திற்கு புறம்பாக இருந்ததால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவர்களின் கடமை என நினைக்கிறேன். வன்முறையை தூண்டும் வகையில் யார் செயல்பட்டாலும் அது தவறுதான். அது மீம்ஸ் ஆக இருந்தாலும் சரி, கோலத்தில் போட்டாலும் சரி” எனத் தெரிவித்தார்.