மதுராந்தகம் ஏரியின் ஷட்டர்களை பாதுகாக்க பல கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனாலும், ஷட்டர்கள் பராமரிப்பின்றி துருப்பிடித்து காட்சி அளிப்பதை புதிய தலைமுறை படம்பிடித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்து 411 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது மதுராந்தகம் ஏரி. 5 மதகுகள், 110 ஷட்டர்கள் கொண்ட இந்த ஏரி நீரின் மூலம், மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அவ்வப்போது பெய்யும் மழையால் 23 அடி முழுக்கொள்ளவு கொண்ட மதுராந்தகம் ஏரி நிரம்பிக் காணப்பட்டாலும், இது சில நாட்களில் கானல் நீராகிவிடும். ஏனெனில் இந்த ஏரியின் அடிப்பகுதி சுமார் 18 அடி வரை வெறும் மண்ணால் நிரம்பியுள்ளதாகவும், 50 ஆண்டுகளாக ஏரி தூர்வாரப்படாமல் இருப்பதாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள்
அப்பகுதி விவசாயிகள்.
18 அடியிலிருந்து 23 அடி வரையிலான நீரும், ஓட்டை உடைசலான ஷட்டர்கள் மூலம் வெளியேறி வீணாகிவிடுகிறது. ஏரியை சுற்றியுள்ள 110 ஷட்டர்களை பராமரிக்க, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 3 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், ஷட்டர்கள் துருப்பிடித்த நிலையிலேயே காணப்படுவதோடு, ஆங்காங்கே ஓட்டை உடைசலாகவும் காட்சியளிக்கிறது. இதனால், ஏரி நிரம்புவதற்கு முன்னரே ஆங்காங்கே தண்ணீர் வெளியேறி வருகிறது. முறையான பாதுகாப்பும் இல்லாததால் அப்பகுதி இளைஞர்கள், ஷட்டரை திறந்துவிட்டு குளிப்பதையும் காணமுடிகிறது.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் தியாகராஜனிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அனுப்பி, ஷட்டர்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.