வாக்குப்பதிவு ANI
தமிழ்நாடு

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்!!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது.

Premkumar S

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அதிமுக, வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால் 3-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால், சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து வெளியேறினர்.

குறிப்பாக, மதுராந்தகம் தொகுதியில் வெற்றிபெற்ற மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதியில் வெற்றிபெற்ற ஜெயக்குமார், தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற சத்யபாமா, அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா ஆகியோரும், முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும், அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்தனர்.

தலைமைச் செயலகம்

மேலும், தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்ததால், தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்தது. இந்த 7 தொகுதிகளில், 5-ல் தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இடைத்தேர்தலை நடத்த முடியாத சூழல் இருந்தது. இந்நிலையில், மீதமுள்ள 2 தொகுதிகளான மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்தச்சூழலில் தான், இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. செப்டம்பர் 16ஆம் தேதி வரை வேட்பு தாக்கல் செய்யலாம்.

மதுராந்தகம் தொகுதியை பொறுத்தவரையில் மொத்தம் 285 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. மொத்தமாக இந்த தொகுதியில் 2 லட்சத்து 13 லட்சத்து 689 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 104886 பேரும், பெண் வாக்காளர்கள் 108738 பேரும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 65 பேரும் உள்ளனர்.

அதேபோல, தாராபுரம் தனி தொகுதி இடைத் தேர்தலை பொறுத்தவரை, 2,23,243 வாக்காளர்கள் உள்ளனர். 320 வாக்குசாவடிகள் உள்ளன. அதில் 18 வாக்குசாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்படுள்ளதாகவும், தாராபுரம் தனி தொகுதியை கண்காணிக்க 9 பறக்கும் படைகள் அமைப்பட்டுள்ளதாகவும், அவை 3 அணிகளாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாற்றுவர்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.