by-election results ANI
தமிழ்நாடு

நாளை இடைத்தேர்தல் முடிவுகள் : யாருக்கு சாதகமாக இருக்கும் ?வெற்றியை தீர்மானிக்கும் காரணிகள் என்ன ?

நாளை இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணங்கள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

Praveen Joshva L

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் வாக்குகள் குறைவாக பதிவானது. நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது..

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் வென்ற அதிமுகவை சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதேபோல், முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியும் காலியானது. இதில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த சட்டமன்ற இடைத் தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாம் தமிழர் கட்சி ஆகியவை தீவிரமாக களமாடியுள்ளன. கடந்த 6-ம் தேதி இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், அதில் பொதுத்தேர்தலை விட குறைந்த அளவே வாக்குகள் பதிவானது.

மதுராந்தகத்தில் கடந்த 2026 பொதுத்தேர்தலில் 89.90% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது இடைத்தேர்தலில் மொத்தம் 80.31% வாக்குகளே பதிவாகின. அதேபோல், தாராபுரத்தில் கடந்த 2026 பொதுத்தேர்தலில் 93.22% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது இடைத்தேர்தலில் 85.90% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருக்கிறது. அதாவது, இரு தொகுதிகளிலும் முறையே 9.58% மற்றும் 7.34% வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.

ஆளும் தவெக சார்பில் முதல்வர் விஜய் இரு தொகுதிகளிலும் கடுமையான பிரச்சாரத்தினை மேற்கொண்டார். இது தங்களுக்கு சாதகமாக மாறியுள்ளதாகவும், தவெக அரசின் திட்டங்கள் தங்களை வெற்றிபெற வைக்கும் என்றும் தவெக தரப்பு நம்பிக்கையுடன் இருக்கிறது.

கடந்த முறை திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த விசிக,IUML மற்றும் காங்கிரஸ் கட்சி தற்போது தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது தவெகவுக்கு ஒரு பலமாகவும், திமுகவுக்கு பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.

அதே போல அதிமுக கூட்டணியில் இருந்த பாமக இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று கூறியுள்ளது. வட மாவட்டங்களில் அதிக செல்வாக்கு கொண்ட பாமக இந்த முடிவை எடுத்துள்ளது இந்த தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் வட மாவட்டங்களில் அதிமுக அதிக தொகுதிகளில் வெல்ல பாமகவின் ஆதரவு முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இந்த தேர்தலில் பாமக யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்தது அதிமுகவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

தவெகவிற்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடுவது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலில் சட்டம் ஒழுங்கு குறைபாடுகளையும், மின்வெட்டு, விலை வாசி உயர்வையும் முதன்மை குற்றச்சாட்டாக முன்வைத்துள்ளன. அதே போல அதிமுக எம்.ஏல்.ஏக்களை குதிரை பேரம் மூலம் தவெக தங்கள் கட்சியில் இணைத்துக்கொண்டதாகவும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளன. நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணமாக இது போன்ற விவகாரங்களே முன்னிலை படுத்தப்படுகிறது.

சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் முடிவுகள் மாநில அரசியலின் போக்கையே மாற்றின. அதேபோல், இந்தத் தேர்தல் முடிவுகளும் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிய தமிழ்நாடே காத்திருக்கிறது.