தமிழ்நாடு

மதுரை: காவல்துறையினர் துன்புறுத்தியதாக கூறி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

மதுரை: காவல்துறையினர் துன்புறுத்தியதாக கூறி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

நிவேதா ஜெகராஜா
மதுரையில் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாக கூறி தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இவ்விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை பீ.பி.குளம் பி.டி.ராஜன் சாலை பகுதியில் உள்ள மலைராஜன் - தங்கம்மாள் தம்பதியினரின் மகனான ஈஸ்வரன் என்ற 30வயது இளைஞர் தனது வீட்டின் அருகே கடந்த வாரம் முழு ஊரடங்கு நாள் மற்றும் விடுமுறை தினங்களில் மது விற்பனை செய்ததாக கூறி போது தல்லாகுளம் காவல்நிலையத்தை சேர்ந்த 4 காவலர்கள் ஈஸ்வரனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் ஈஸ்வரனின் வீட்டிற்குள் காவல்துறையினர் நுழைந்து மதுப்பாட்டில்கள் உள்ளதா என சோதனையிட்டதோடு, ஈஸ்வரனை நடுரோட்டில் வைத்து காவலர்கள் தாக்கியதாக அவரது தாயார் தங்கம்மாள் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி தல்லாகுளம் காவல்நிலையம் அருகேயுள்ள அம்பேத்கரின் சிலை முன்பாக ஈஸ்வரன் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் 70 சதவித தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டு கடந்த 5 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும் தீக்காயங்களுடன் வீடியோவொன்றையும் வெளியிட்டார் ஈஸ்வரன். அதில், தன்னை காவல்துறையினர் அடிக்கடி அடித்ததோடு பணம் கேட்டாதாகவும் பொய் வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டியதாகவும் கூறியிருந்தார். அப்படியான சூழலில், இன்று ஈஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இப்போது பேசியுள்ள உயிரிழந்த ஈஸ்வரனின் தாயார், “காவல்துறையினர் தாக்கியதாலும், மிரட்டியதாலும் மகன் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்தார். ஈஸ்வரனின் நிலைக்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விஷயத்தில் காவல்துறை தரப்பில் ‘தீக்குளித்த ஈஸ்வரன் மீது ஏற்கனவே மது விற்பனை தொடர்பாக வழக்குகள் உள்ளது. சம்மந்தப்பட்டதினத்தில் ஈஸ்வரன் மற்றும் சிலர் மது விற்றதாக தகவல் வந்ததை தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மட்டுமே நடத்தினர். காவல்நிலையத்திற்குகூட ஈஸ்வரனை அழைத்து வரவில்லை” என விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.