தமிழ்நாடு

தழைக்கும் மனிதம்: தாயை இழந்து தவிக்கும் நாய் குட்டிகளுக்கு ஆதரவளிக்கும் இளைஞர்

நிவேதா ஜெகராஜா

மதுரையில் தாயை இழந்து சாலையில் தவித்த ஏழு நாய்க்குட்டிகளை அரவணைத்து வீட்டில் வளர்த்து வரும் பொறியியல் பட்டதாரியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போதைய காலத்தில் மனிதர்களிடம் மனிதநேயம் என்பது மெல்ல மெல்ல மறைந்து வரும் சூழலில் மதுரையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவரின் மனிதநேயமிக்க தாயுணர்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மதுரை மீனாம்பாள்புரம் கிழக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் 27 வயதான விக்னேஷ்வர். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரபல ஐடி நிறுவனத்தில் பொறியாளராக கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் 2020 கொரானா வைரஸ் தொற்று காரணமாக மதுரை திரும்பிய விக்னேஷ்வர், தற்போதுவரை வீட்டிலிருந்தே பணிகளை செய்து வருகிறார். செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆவர்முடைய இவர், தன் வீட்டில் சொந்தமாக நாய் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த வாரம் தனது தெருவில் நடந்து சென்ற போது தெரு நாய் ஒன்று ஏழு குட்டிகளை ஈன்ற நிலையில் உயிரிழந்ததை அவர் கண்டிருக்கிறார். நாய்க்குட்டிகளின் பரிதாப நிலையை எண்ணி ஏழு குட்டிகளையும் தனது இல்லத்திற்கு எடுத்துச்சென்ற அவர், அவற்றை ஒரு அட்டைப்பெட்டியில் போட்டு பாதுகாத்து வருகிறார். மேலும் நாய்க்குட்டிக்கு குழந்தைக்கு கொடுக்கும் பால் டப்பாவை பயன்படுத்தி பால் கொடுத்து கவனித்து வருகிறார். தனது பணிகளுக்கிடையே கிடைக்கும் ஒய்வு நேரத்தை பயன்படுத்தி ஏழு நாய்குட்டிகளையும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார் விக்னேஷ்வர்.

ஏழு நாய்க்குட்டிகளும் கண் திறக்கும் வரை பார்த்துக்கொள்ள இருப்பதாகவும், அதற்கு பிறகு கேட்பவர்களுக்கு நாய்க்குட்டிகளை வளர்ப்பதற்கு கொடுக்கலாம் என்ற முடிவில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். விலையுயர்ந்த வெளிநாட்டு நாய்களை வாங்கி வீட்டில் வளர்ப்பதற்கு பதில் நம் நாட்டை சேர்ந்த நாட்டு நாய்களை வளர்க்க வேண்டும் எனக்கூறும் விக்னேஷ்வர், பொதுமக்கள் குறைந்தபட்சம் சாலையோரத்தில் ஆதரவின்றி, உதவி தேவைப்படும் வகையில் விலங்குகள், நாய்கள் இருந்தால் அதை விலங்குகள் நல ஆர்வலகளுக்கும், கால்நடைத்துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்.