கொரோனாவால் தந்தையை இழந்த சிறுமியின் ஆசையை மதுரை ஆட்சியர் அனிஷ்சேகர் நிறைவேற்றினார்.
மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் சோனா தீபன், இவரது கணவர் தனுஷ் தீபன், பெங்களூரில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி கொரோனா தொற்றின் காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இந்நிலையில் கொரோனாவால் தாய் தந்தையர் உயிரிழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பாக வழங்கப்படும் நிதி உதவியை பெறுவதற்கு மதுரை மாவட்ட சமூக நலத்துறையில் சோனா தீபன் விண்ணப்பிக்க ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார்.
இவரது விண்ணப்பத்தை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் பாண்டியராஜா மற்றும் சண்முகம் ஆகியோர் சரி பார்த்துக் கொண்டிருந்தனர், அப்போது சோனா தீபனின் 9 வயது மகள் டீடா தீபன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வியந்து பார்த்துக் கொண்டிருந்தார், தனது தாயார் சோனாவிடம் ஆட்சியர் அலுவலகம் எப்படி இருக்கும்? அவரது பணிகள் எவ்வாறு இருக்கும்? என்பது குறித்து கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தார், இதனை கேட்டுக் கொண்டிருந்த குழந்தைகள் நலக்குழு அலுவலர் பாண்டியராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற கோரி வேண்டுகோள் வைத்தார்.
இந்த தகவல் மதுரை ஆட்சியர் டாக்டர் அனீஷ் சேகருக்கு தெரியப்படுத்தப்பட்டது, அவர், உடனடியாக அக்குழந்தையை அழைத்துக் கொண்டு அவரது அறைக்கு வருமாறு உத்தரவிட்டார், இதனையடுத்து ஆட்சியர் அறைக்குள் வந்த டீடா தீபன், மிகவும் மகிழ்ச்சியோடு அந்த அறையை பார்த்து மகிழ்ந்தார், மாவட்ட ஆட்சியரும் மாணவி டீடாவுக்கு விளக்கம் அளித்தார், வருங்காலத்தில் நானும் ஐஏஎஸ் படித்து ஆட்சிப் பணியில் அமர்ந்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய ஆசை உள்ளது என தன்னுடைய ஆசையை ஆட்சியரிடம் விளக்கியுள்ளார்.
சிறுமியை நன்றாக படிக்குமாறும், படித்து மதுரைக்கே ஆட்சியராக வரவேண்டும் என வாழ்த்து தெரிவித்ததோடு, ஆட்சியராகும் உன்னை நாங்கள் வந்து சந்திக்க வேண்டும் என கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.