தமிழ்நாடு

2500 கிலோ கமகமக்கும் பிரியாணியுடன் முனியாண்டி விலாஸ் திருவிழா

webteam

மதுரை மாவட்டம் வடக்கம்பட்டியில் இரவு முழுவதும் கிடா வெட்டி, அதிகாலை சாமிக்கு படையல் வைத்து கொண்டாடப்படும் பிரியாணி திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றுள்ளது.

மதுரை முனியாண்டி விலாஸ்; இந்தப் பெயரைக் கேட்டாலே நாக்கில் எச்சில் ஊறும். தமிழகம் முழுவதும் பட்டித்தொட்டியெல்லாம்  முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் பரவிக்கிடக்கின்றன. மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா, கள்ளிக்குடி அருகேயுள்ளது வடக்கம்பட்டி என்ற கிராமம். இந்த வடக்கம்பட்டி கிராமம்தான் முனியாண்டி விலாஸ் ஹோட்டலின் தாய் வீடு. 

முனியாண்டி விலாஸ் என்ற ஹோட்டல் உருவானதற்குப் பின்னால் ஒரு கதை உள்ளது. வடக்கம்பட்டி ஊரில் முனீஸ்வரருக்கு கோயில் ஒன்று உள்ளது.1935 -ம் வருடம் வடக்கம்பட்டி சுற்றுவட்டாரத்தில் பஞ்சம் ஏற்பட்ட போது. சுப்பையா என்பவர் முனியாண்டி கோவிலிற்கு சென்று பிழைக்க வழி செய்யுமாறு பிரார்த்தனை செய்துள்ளார். அன்று இரவு அவரின் கனவில் வந்த முனீஸ்வரர், ‘அன்னம் விற்று பிழைப்பை பார்த்துக்கொள்’ என்று கூறினாராம். இதனையடுத்து முனீஸ்வரரின் வாக்கை ஏற்று 1935-ம் ஆண்டில் காரைக்குடியில் சுப்பையா முதன்முதலாக முனியாண்டி விலாஸ் அசைவ ஹோட்டலைத் தொடங்கியுள்ளார். 

இதன் மூலம் நல்ல வருமானம் சுப்பையா அவர்களுக்கு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து ஊர் மக்கள் பிறரும் ஒன்றன் பின் ஒன்றாக முனியாண்டி விலாஸ் ஹோட்டல் தொடங்கினார்கள். இதனைத்தொடர்ந்து, மதுரை முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஹோட்டல்கள் உருவாகின. அனைத்து முனியாண்டி விலாஸ் ஹோட்டல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. வடக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும்கூட முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் ஹோட்டல்களைத் தொடங்கி தொடர்ந்து இன்றுவரை நடத்தி வருகின்றனர். 

பிழைக்க புதியவழி காண்பித்த முனீஸ்வரருக்கு ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் வெள்ளிக்கிழமை அன்று பால்குடம் எடுத்தும் அர்ச்சனை தட்டு எடுத்தும், மூனீஸ்வரருக்கு பூஜைகள் நடைபெறுகிறது. பின் இரவு முழுவதும் கிடா வெட்டு நடைபெற்று சமையல் தொடங்கி காலை 4 மணியளவில் மூனிஸ்வரருக்கு படையல் வைத்து, பூஜைகள் நடத்தி சுற்றுபுறம்  உள்ள 50 கிராம மக்களுக்கு பிரியாணி வழங்கப்படுகிறது. இவ்வாறு வடக்கம்பட்டி மக்கள் முனியாண்டி கோவிலுக்கு விழா எடுக்கின்றனர்.  

இந்நிலையில் 84 வது ஆண்டாக இந்த ஆண்டு இன்று விழா நடைபெற்றது. முனீஸ்ரவர் விழாவின்போது பக்தர்களுக்குப் பிரசாதமாக இங்கு மட்டன் சிக்கன் பிரியாணி வழங்கப்படுவது சிறப்பு அம்சம். இந்தாண்டு 200-க்கும் மேற்பட்ட ஆடுகள், 300 மேற்பட்ட சேவல்கள், 2500 கிலோ பிரியாணி அரிசி கொண்டு பிரியாணி சமைத்து அன்னதானம் வழங்கப்பட்டது. முனியாண்டி கோயிலிலுள்ள முனிஸ்வரர் சைவம் எனவே அவருக்கு பொங்கல் படைக்கப்படுவதாகவும் அவர் அருகில் உள்ள கருப்பணச்சாமி முன்பே கொட வெட்டு நடத்தி, படையல் வைக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.

இதற்காக 50 பிரம்மாண்ட பாத்திரங்களில் கோயில் வளாகத்தில் இரவு முழுவதும் சமையல் நடைபெறும். பின் சனிக்கிழமை (இன்று) அதிகாலை 4 மணிக்கு முனீஸ்வரருக்குப் பிரியாணி படைக்கப்படும். பிறகு காலை 5 மணி முதலே பக்தர்களுக்குப் பிரியாணி பிரசாதமாக வழங்கப்படும். முனீஸ்வரர் கோயில் மட்டன் பிரியாணியை யார் வேண்டுமானாலும் வாங்கிச் சாப்பிடலாம். வீட்டுக்கும் வாங்கிச் செல்லலாம் என்கின்றனர். 

இந்த நிகழ்ச்சி சிறிய அளவில் தொடங்கியது தற்போது மிகப் பெரிய அளவில் நடைபெறுகிறது. வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் 6 முறை சைவ உணவு வழங்கப்படுவதாகவும், சனிக்கிழமை காலை மட்டும் பிரியாணி பிரசாதமாக வழங்கப்படுவதாகவும் முனியாண்டி விலாஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விழாவிற்கான முழு ஏற்பாடுகளும் முனியாண்டி விலாஸ் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களே செய்வதாக தெரிவிக்கின்றனர். முனியாண்டி விலாஸ் உரிமையாளர்கள் மற்றும் உறவினர்கள் கூறும் போது அதிகாலை வழங்கப்படும் பிரியாணி பிரசாதம் சாப்பிடுவதன் மூலம் குழந்தை வரம், கல்யாணம் வரம், வீடு வாகனம் வாங்கும் யோகம், நோய்கள் சரியாவதாக கூறுகின்றனர்.