தமிழ்நாடு

’உடனே இந்தியாவை விட்டு வெளியேறிவிட வேண்டும்’ - எல்டிடிஇ அமைப்பைச் சேர்ந்த இருவர் விடுதலை!

kaleelrahman

இலங்கை எல்டிடிஇ அமைப்பைச் சேர்ந்த இருவர் தங்களை கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையிலிருந்து விடுவிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், கீழமை நீதிமன்றம் விதித்த 10 வருட சிறை தண்டனையை 7 வருடமாக குறைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சுபாஷ்கரன், கிருஷ்ணகுமார், ஆகியோர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனி பிரிவு போலீசார் சோதனையின்போது ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி என்ற இடத்தில் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் தங்கியிருந்த ராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் தனிப்பிரிவு போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது தமிழகத்தில் இருந்து சயனைடு குப்பிகள், சேட்டிலைட் போன், சிம் கார்டுகள் மற்றும் சில போதை பொருட்கள், லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததோடு இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், தடை செய்யப்பட்ட எல்டிடிஇ அமைப்பினருக்கு இவர்கள் ஆதரவாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டதால் இவர்களுக்கு 10 வருட கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரியும் தங்களை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திரும்ப அனுப்ப உத்தரவிடக் கோரி இருவரும் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது இந்தியாவில் இனி சட்டவிரோத செயல்களில் தாங்கள் ஈடுபட மாட்டோம் என்றும் நீதிமன்றம் விடுவிக்கும் பட்சத்தில் உடனடியாக இலங்கைக்கு திரும்பி விடுவதாக உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்திருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆனதால் பத்து வருட சிறை தண்டனையை 7 வருடமாக குறைத்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் இவர்களை சிறையில் இருந்து விடுவிக்கலாம் என உத்தரவு பிறப்பித்த நீதிபதி சிறையிலிருந்து வெளியேறிய உடன் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். வெளியேறும் வரை அகதிகள் முகாமில் தங்கி கொள்ளலாம் என உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தார்