தமிழ்நாடு

மதுரை: அறக்கட்டளை குழந்தைகளை விற்றதாக புகார்: அதிகாரிகளிடம் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

kaleelrahman

மதுரையில் அறக்கட்டளையில் இருந்து குழந்தைகளை விற்ற விவகாரம் தொடர்பாக, வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மாநில மனிதஉரிமை ஆணையத்தில் நேரில் ஆஜராகியுள்ளனர்.

மதுரையில் செயல்பட்டு வந்த இதயம் அறக்கட்டளையில் செயல்பட்ட முதியோர் காப்பகத்தில் தங்கியிருந்த குழந்தைகள் சட்டவிரோதமாக இறந்ததாகக் கூறியதோடு போலியான ஆவணங்கள் தயாரித்து நடகமாடி குழந்தைகளை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட விவகாரம் மதுரை மட்டுமல்லாது தமிழகத்தை பரபரப்புக்கு உள்ளாக்கியது. இந்த விவகாரத்தில்  இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டன.

இது தொடர்பான புகாரில் மதுரை தல்லாகுளம் காவல் துறையினர் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அறக்கட்டளையின் தலைவர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலைவாணி, மதார்ஷா உள்ளிட்ட 9 பேரை கைதுசெய்து நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதையடுத்து அறக்கட்டளை மற்றும் உதவி மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநில மனிதஉரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து தல்லாகுளம் காவல் ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் வடக்கு வட்டாட்சியர் முத்து விஜயகுமார், மதுரை வடக்கு விஏஒ முத்துமொழி, பீபீ குளம் தலையாரி சம்பத் ஆகிய நான்கு பேரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியிருந்தார்கள்.

அதன் அடிப்படையில் இன்று மாநில் மனிதஉரிமை ஆணையத்தில் முத்து விஜயகுமார், முத்துமொழி, சம்பத் ஆகிய 3 பேரும் நேரடியாக ஆஜரானார்கள். அவர்களிடம், இதயம் அறக்கட்டளையில் குழந்தை விற்பனை செய்யப்பட்டதில் எதுபோன்ற குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. மற்றும் வருவாய்த் துறை சார்பில் எதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டீர்கள் உள்ளிட்ட பல கேள்விகளை கேட்டு எழுத்துப்பூர்வமான விளக்கங்களை பெற்றுள்ளனர்.