மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நெல்லையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற கார், மதுரை கப்பலூர் சுங்கச்சாவடிக்கு வந்துள்ளது. அதிலிருந்த ஆறு பேர் சுங்கக்கட்டணம் செலுத்த மறுத்ததாக தெரிகிறது. இதனால் சுங்கச்சாவடி ஊழியர்கள் அந்தக் காரை தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது காரில் இருந்து இறங்கிய இளைஞர் தான் வைத்திருந்த கைத் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டுவிட்டு தப்பியோடி உள்ளார். அவரை விரட்டிப் பிடித்த சுங்கச்சாவடி ஊழியர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்த களேபரத்தில் சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த கார் தப்பிச் சென்றுவிட்டது. துப்பாக்கியால் சுட்ட இளைஞர் திருச்சியைச் சேர்ந்த சசிக்குமார் என்பது விசாரணையில் தெரியவந்தது. வழக்கு ஒன்றில் கையெழுத்திடுவதற்காக நெல்லை சென்றுவிட்டு மீண்டும் திருச்சி திரும்பிய போது சுங்கச்சாவடியில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் தப்பியோடிய 5 பேரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் தப்பியோடிய 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உசிலம்பட்டி அருகே காரை நிறுத்திவிட்டு ஆட்டோவில் தப்ப முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.