நாகலட்சுமி, உயிரிழந்த பெண்
நாகலட்சுமி, உயிரிழந்த பெண் PT
தமிழ்நாடு

ஓடும் பேருந்திலிருந்து குதித்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம் - சிக்கிய கடிதம்; 5 பெண் குழந்தைகள் தவிப்பு!

PT WEB

மதுரையில் 100 நாள் வேலை திட்ட பணித்தள பொறுப்பாளராக இருந்த பெண் ஒருவரை, வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிளர்க் திட்டியதாக கூறி, ஓடும் அரசுப்பேருந்தில் இருந்து குதித்து அந்தப் பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். அவரது மனைவி நாகலட்சுமி (31). இந்தத் தம்பதிக்கு சங்கீதா, விஜயதர்ஷினி, தேன்மொழி, சண்முகப்பிரியா, பாண்டி சிவானி என 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.

அரசு மருத்துவமனை

5 பெண் குழந்தைகளோடு நாகலட்சுமி கஷ்டப்பட்டு வந்ததால், கருணை அடிப்படையில் 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் பணி வழங்கியுள்ளார். இதையடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நாகலட்சுமி பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக நாகலட்சுமி பணிக்கு சென்றபோது மையிட்டான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன் மற்றும் கிளர்க் முத்து ஆகியோர், நாகலட்சுமியை தரக்குறைவாக பேசி இப்பணியினை உனக்கு தர இயலாது எனக் கூறி மிரட்டியதாக தெரிகிறது.

அரசு மருத்துவமனை

இதனால் மனம் உடைந்த நாகலட்சுமி, இன்று மதியம் மையிட்டான் பட்டி கிராமத்திலிருந்து திருமங்கலம் நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில்தான் அரசுப் பேருந்தில் தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தபோது, சிவரக்கோட்டை பகுதி வழியாக அரசுப் பேருந்து வந்த நேரத்தில், நாகலட்சுமி தன்னுடைய 2 குழந்தைகளை அருகில் பயணம் செய்த சக பயணிகளிடம் குழந்தைகளை கொடுத்து விட்டு, கடிதம் ஒன்றையும் கொடுத்துவிட்டு, திடீரென பேருந்தில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார்.

நாகலட்சுமியின் சகோதரி

பேருந்தில் இருந்து குதித்ததால், ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து வந்த கள்ளிக்குடி போலீசார், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு நாகலட்சுமியை அனுப்பி வைத்தனர். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாகலட்சுமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். எனினும், நாகலெட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் நாகலட்சுமியின் கடிதத்தை கைப்பற்றினர். அக்கடிதத்தில் 100 நாள் வேலை பொறுப்பாளராக பணிபுரிய கலெக்டர் பணி வழங்கியதாகவும், அந்த வேலையை தனக்கு வழங்க மாட்டேன் என்று மையிட்டான்பட்டி வார்டு உறுப்பினர்கள் வீரகுமார், பாலமுருகன் மற்றும் கிளர்க் முத்து ஆகியோர் தவறாக பேசி மனதை காயப்படுத்தியதாகவும், அதற்காகத்தான் கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், புகார் அளித்ததற்கு ஏன் புகார் அளிக்கிறாய் என்று தகாத வார்த்தைகளால் திட்டி தற்கொலை முயற்சிக்கு தன்னை ஆளக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தனக்கு ஐந்து பெண் குழந்தைகள் உள்ளது. அதனால் வேலை கேட்டது தவறா.!” என கடிதத்தில் தெரிவித்துள்ள அவர், தனது தற்கொலை முயற்சிக்கு முக்கிய காரணம் மையிட்டான்பட்டி கிளர்க் முத்து, வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன் ஆகியோர் தன்னை அடிக்க கை ஓங்கி அசிங்கப்படுத்தியது தான் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், தொடக்கத்தில் இருந்தே நாகலட்சுமியை பணி செய்ய விடாமல் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிளர்க் ஆகியோர் மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கணவர் கணேசன் புகார் அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் கடிதம் கொடுத்து பணிக்கு சேர்ந்த பெண்ணையே வேலை பார்க்க விடாமல் செய்ததோடு, தற்கொலை செய்ய வைத்து 5 பெண் குழந்தைகளை அனாதையாக்கி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தானும், தன் குழந்தைகளும் தற்கொலை செய்துவோள்வோம் என கணேஷ் வேதனையோடு கூறினார்.

நாகலட்சுமி கணவர்

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட போது, இந்தச் சம்பவம் குறித்து கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது எனவும், உண்மை இருந்தால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் அனீஷ்சேகர் விளக்கம் அளித்துள்ளார்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும்போது உரிய ஆலோசனைப்பெற, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனைப் பெறலாம்.