தமிழ்நாடு

மதுரை: கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இன்று முதல் முன்பதிவு கட்டாயம்

மதுரை: கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இன்று முதல் முன்பதிவு கட்டாயம்

kaleelrahman

மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இன்று முதல் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 95 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 50 ஆயிரத்து 409 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, இதில், 18 முதல் 45 வயதுடையோர் 1 லட்சத்து 66 ஆயிரம் பேர் முதல் டோஸ் செலுத்திக் கொண்டுள்ளனர். 57,836 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி 2370 டோஸ் தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ள நிலையில், இன்று மாலைக்குள் 17,500 டோஸ் வர உள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி செலுத்தி கொள்ள தினந்தோறும் மக்கள் ஆர்வம் காட்டிவரும் நிலையில், ஒவ்வொரு மையங்களிலும் நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கூடுவதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த மதுரை அரசு மருத்துவமனை தடுப்பூசி மையத்தில் இன்று முதல் முன் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, தடுப்பூசி செலுத்த விரும்புவோர் 7823995550 என்ற உதவி எண்ணிற்கு அழைத்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும், உதவி எண்ணிற்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போன் செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முன்பதிவிற்கு பிறகு குறுஞ்செய்தி மூலம் தடுப்பூசி செலுத்தும் தேதி மற்றும் நேரம் தெரிவிக்கப்பட்டும். அந்த குறுஞ்செய்தியை கொண்டு வந்தால் மட்டுமே தடுப்பூசி போடப்படும். இதன் மூலம் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதனிடையே இன்று காலை முன்பதிவு செய்யாமல் வந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களை காவல் துறையினர் திருப்பி அனுப்பினர்.