தமிழ்நாடு

அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து மாலை அணிவித்த மர்ம நபர்கள்: மதுரையில் பரபரப்பு

kaleelrahman

மதுரையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி முன்னாள் தமிழக முதல்வர்களின் சிலை திறக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதற்கு முன்பாகவே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தது. இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாநகராட்சி ஊழியர்கள் துணியால் மூடியுள்ளனர்.

இந்நிலையில், மதுரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் சிலைகளும் வருகிற மே 2ஆம் தேதி வரை துணியால் மூடப்பட்டிருக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 

ஆனால், தற்போது மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை மூடியிருந்த துணியை அகற்றிவிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்துள்ளனர். இதேபோல் மதுரை யானைக்கல் பகுதியில் உள்ள அண்ணா சிலையை மூடியிருந்த துணியையும் அகற்றிவிட்டு மாலை அணிவித்ததோடு அதன் அருகாமையில் திமுக கொடியும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.