செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு தஞ்சாவூருக்கு சென்ற அரசு பேருந்தில் நடத்துநராக புதுக்கோட்டை விசலூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் பணியில் இருந்துள்ளார். அப்போது அவர் படிக்கட்டு அருகே நின்றபடி பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். மதுரை - திருச்சி சாலையில் பேருந்து வேகமாக சென்றுகொண்டிருந்த போது, சாலையின் நடுவேஇரும்பு தடுப்பு இருந்ததால் ஓட்டுநர் திடீரென ப்ரேக் அடித்துள்ளார்.
அப்போது பேருந்தின் கதவு மூடாமல் இருந்ததால், படிக்கட்டு வழியாக நடத்துநர் கருப்பையா சாலையில் தவறி விழுந்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த கருப்பையாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கருப்பையா வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிறிவத்துள்ளனர்.
இதனையடுத்து உடற்கூராய்விற்காக அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.