தமிழ்நாடு

மதுரை: மேம்பால பணியில் அடுத்தடுத்து நிகழும் விபத்து – அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்

மதுரை: மேம்பால பணியில் அடுத்தடுத்து நிகழும் விபத்து – அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்

kaleelrahman

மதுரை - நத்தம் மேம்பால பணி மீண்டும் கம்பி உடைந்து விபத்து இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

மதுரை புதுநத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.545 கோடி மதிப்பில் மதுரை தல்லாகுளம் முதல் செட்டிகுளம் வரை 7.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 2022 ஏப்ரல் மாதம் பணிகளை முடித்து பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், மேம்பாலத்தின் அருகேயுள்ள இணைப்பு பாலத்தின் ஒரு பகுதி 2021 ஆகஸ்ட் 28ஆம் தேதி இடிந்து விழுந்ததில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளர் உயிரிழந்தார்.

விபத்திற்கான காரணம் குறித்து திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக பேராசிரியர் பாஸ்கர் தலைமையில் 3 வல்லுனர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். விபத்து தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை துறையால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு பொறியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து ஆய்வுக்குழு அறிக்கையின் அடிப்படையில் மேம்பால கட்டுபான ஒப்பந்த நிறுவனமான துஆஊ pசழதநஉவள இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.

இந்நிலையில் நேற்றிரவு மதுரை திருப்பாலை பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணியின்போது பாலத்தின் மீது இருந்த இரும்பு கம்பி திடீரென அறுந்து விழுந்தது. அப்போது பாலத்தின் கீழே நின்றுகொண்டிருந்த மதுரை திருப்பாலை பகுதியைச் சேர்ந்த விஷ்வா மற்றும் மேம்பால பணியில் ஈடுபட்டுவந்த பணியாளரான தஞ்சாவூரைச் சேர்ந்த பாஸ்கர் ஆகிய இருவருக்கும் வயிற்றில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து இரவு நேரத்தில் நடந்ததாலும் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் இருவருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளது. இதே விபத்தை பகல் நேரத்தில் ஏற்பட்டிருந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் தொடர்ந்து கவனக்குறைவாக மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் பறக்கும் மேம்பால பணியை தொடர்ந்து மேற்கொண்டால் பணி நிறைவடைவதற்குள் இன்னும் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து நிகழும் விபத்து சம்பவங்களால் வாகன ஓட்டிகளும் பொதுமக்கள் பாலத்தின் கீழே அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.