தமிழ்நாடு

மதுரை: நீரில் மூழ்கிய ரயில்வே சுரங்கப்பாதை; ஆபத்தை உணராமல் பயணிக்கும் வாகன ஓட்டிகள்

kaleelrahman

மதுரையில் கனமழையால் மூழ்கிய ரயில்வே சுரங்கப் பாதையில் போதிய தடுப்புகள் அமைக்காததால், ஆபத்தான முறையில் வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர்.

மதுரை ஆரப்பாளையத்தை அடுத்த ராஜா மில் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை இன்று காலை பெய்த கனமழையால் மூழ்கியுள்ளது. 6 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால் ரயில்வே சுரங்கப்பாதையில் போக்குவரத்து தடைப்பட்டது.

இந்நிலையில், 6 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கியுள்ளதால் ஒரு புறத்தில் மட்டும் காவல் துறையினர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளை மாற்றுப் பாதையில் செல்லும்படி அறிவுறுத்தி வரும் நிலையில், முக்கியமான போக்குவரத்து பகுதியான ஆறுமுகசந்தி, ஒர்க்ஷாப் ரோடு, ராஜா மில் ரோடு, மீனாட்சி பஜார் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்தை தடை செய்ய எந்தவிதமான தடுப்புகளும் அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் தண்ணீரை கடந்து சென்றனர்.

பொதுமக்களின் ஆபத்தை உணர்ந்து மதுரை மாநகராட்சி, மற்றும் மதுரை மாநகர காவல் துறையினர் உரிய தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.