தமிழ்நாடு

சித்திரை திருவிழா : அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் வெளிநடப்பு

சித்திரை திருவிழா : அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் வெளிநடப்பு

webteam

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் போது தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆட்சியர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதேபோல காலியாக உள்ள 21 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனிடையே மதுரையின் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா, இந்தாண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரல் 7-ஆம் தேதி மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில், முக்கிய வைபவமான தேரோட்டம் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மதுரை சித்திரை திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் தேர்தல் நாளன்று இந்தாண்டு சித்திரை திருவிழா வருவதால், மக்களால் எப்படி வாக்களிக்க முடியும் என பலரும் கேள்வி எழுப்பினர். 

இதனைத்தொடர்ந்து சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். இதுதொடர்பாக நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைப்பெற்றது. அதில் ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க தயார் என மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்தார். 

இந்நிலையில் இன்று இரண்டாம் நாளாக மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைப்பெற்றது. அப்போது சித்திரை திருவிழாவின் போது தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆட்சியரிடம் சிலர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்த பிரதிநிதிகள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து ஆட்சியர் நடராஜன் தலைமையில் மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் , மாநகராட்சி ஆணையர் விசாகன் , மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.