மதுரையில் கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக தனி வார்டு திறக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் சிலர் மியூக்கோர்மைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். தலைவலி, காய்ச்சல், கண்களுக்கு கீழ் வலி மற்றும் பார்வை குறைபாடு ஏற்படுவது போன்றவை இந்த பூஞ்சை பாதிப்புக்கு முக்கிய அறிகுறியாகும்.
மதுரையில் இதுவரை 58,536 பேர் கொரோனா தொற்றால் பதிக்கப்பட்டு அதில் 43679 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14034 பேர் சிகிச்சையில் உள்ளனர். 823 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மதுரையில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து குணமடையும் சிலருக்கு கண்களில் கரும்பூஞ்சை நோய் தாக்கம் கண்டறியப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் இது குறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் விளக்கமளித்துள்ளார்.
கடந்த 2 மாதத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட 20 நபர்களுக்கும் உரிய மருத்துவம் அளித்து குணமடைந்துள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சுமார் 15 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தனி வார்டு திறக்கப்பட்டுள்ளதாகவும், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை முறையை கண்காணிக்க மருத்துவர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை டீன் ரத்னவேல் தெரிவித்தார்.