மதுரையில் நடைபெறும் திருமணங்களில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மணமக்களுக்கு மணக்கும் மலர்களில் முகக்கவசம் செய்து வழங்கி பூக்கட்டும் கலைஞர் அசத்தியுள்ளார்.
திருமணத்திற்கு மாலை ஆர்டர் கொடுப்பவர்களுக்கு மாலையோடு இலவசமாக மணக்கும் மலர் முகக்கவசம் கொடுத்து வருகிறார் மதுரை சுவாமி சன்னதியில் பூக்கட்டும் கலைஞர் மோகன். இதுகுறித்து அவர் கூறுகையில், “மணமக்கள் பலர் திருமணத்தின் போது வெறும் முகக்கவசம் மட்டுமே அணிந்தால் பார்க்க நன்றாக இருக்காது. அதனால் மணமாலையுடன் மலர் முகக்கவசம் அணிந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என ஒரு ஐடியா தோன்றியது. இதையடுத்து மணமக்களே முகக்கவசம் அணிந்திருக்கும் போது நாமும் அவசியம் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அங்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் வரும்.
இது போன்ற வித்தியாசமான முயற்சிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதோடு நான் சந்திக்கும் நபர்களிடம் கொரோனா தாக்காமல் இருக்க சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை கழுவுதல், குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறேன்” எனக் கூறினார்.