மதுரையில் அரசு பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகி உட்பட 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள 24, 25வது வார்டு பகுதிகளில் 2 கோடி மதிப்பீட்டில் சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று சாலை அமைக்கும் பணியின் போது தரமான சாலை அமைக்கப்படவில்லை அமமுக கட்சியினர் உட்பட பலர் அரசு பணியாளர்களுடன் பிரச்னை செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மேலூர் நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா அளித்த புகாரின் பேரில், அமமுக கட்சியின் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் உட்பட 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் மீது அரசு பணிகளை செய்யவிடாமல் தடுத்தல், அரசு பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மேலூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்துள்ளனர்.