மதுரை மத்திய சிறையில் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பாக சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை.
வழக்கின் பின்னணி!
மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகள் தயாரித்த பொருட்கள் மோசடி வழக்கில் சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் சொந்தமான 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வேலூர் திருநெல்வேலி, திருவண்ணாமலை மதுரை தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் 11 இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.
இந்திய தணிக்கை துறை அறிக்கையில் தமிழகத்தின் மூன்று மத்திய சிறைகளில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களில் மோசடி நடந்திருப்பதாக அறிக்கை வெளியானது. கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை இடைப்பட்ட காலகட்டத்தில் ரூ. 14.3 கோடி மோசடி நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தணிக்கை துறை பரிந்துரை செய்திருந்தது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் கைதி ஒருவருக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என்பது தொடர்பான வழக்கில் இந்த மோசடி குறித்து முன்வைக்கப்பட்டது. நீதிமன்றத்தில் தமிழக அரசு இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தது.
கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததிலும் அதை தயாரிப்பதிலும் நடைபெற்ற கோடிக்கணக்கான மோசடி குறித்து பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில், மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த பொருளுக்கு மூலப்பொருட்கள் வாங்கிய விவகாரத்திலும், கைதிகள் தயாரித்த பொருளை விற்பனை செய்த விவகாரத்திலும் ரூ. 1.63 கோடி மோசடி செய்ததில் மதுரையில் பணியாற்றிய சூப்பிரெண்டெண்ட், கூடுதல் சூப்பிரண்டெண்ட் மற்றும் நிர்வாக அதிகாரி என மூன்று சிறைத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்த 8 வியாபாரிகள் என 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
குறிப்பாக, சிறைத்துறை அதிகாரிகளான தியாகராஜன், வசந்தக்கண்ணன், ஊர்மிளா மற்றும் பொருட்கள் விற்பனை செய்த வியபாரிகள் 8 நபர்கள் என மொத்தம் 11 நபர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
தற்போதைய கடலூர் மத்திய சிறை சூப்பரெண்ட்ண்ட் ஊர்மிளா, தற்போதைய பாளையங்கோட்டை மத்திய சிறை கூடுதல் சூப்பிரண்டண்ட் வசந்த கண்ணன் வேலூர் மத்திய சிறை நிர்வாக அதிகாரி தியாகராஜன் இவர்கள் மூவரும் மதுரை மத்திய சிறையில் மோசடி நடந்த ஆண்டுகளில் பணிபுரிந்தபோது இந்த மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த மதுரையைச் சேர்ந்த ஜபருல்லாகான் முகமது அன்சாரி, சென்னை மண்ணடியை சேர்ந்த முகமது அலி, சென்னை கொடுங்குயூரைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் சாந்தி, திருநெல்வேலியைச் சேர்ந்த சங்கரசுப்பு மற்றும் தனலட்சுமி, சென்னை முகப்பேரைச் சேர்ந்த வெங்கடேஸ்வரி ஆகிய வியாபாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் மதுரை மத்திய சிறையில் மூலப் பொருட்கள் வாங்கிய விவகாரத்திலும் மிகப்பெரிய அளவிலான பொருட்கள் கைதிகள் மூலம் தயாரிக்கப்பட்டதிலும் மோசடி நடந்துள்ளது. மேலும், அது தொடர்பாக சிறைத்துறை ஆவணங்களில் முறைகேடு செய்து அரசு துறைக்கு அந்த பொருட்களை சப்ளை செய்ததாக பொய்யாக கணக்கு காட்டியதும் தெரியவந்துள்ளது.
வழக்கில் சிக்கிய வியாபாரிகள் சிறைத்துறை அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து பொய்யாக மூலப் பொருட்களை செய்தது போன்ற போலி பில்களை தயாரித்தும் மோசடி செய்தது அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பொருட்களை சப்ளை செய்தது போன்றும் வாகனத்தில் அனுப்பி வைத்தது போன்றும் போலியான பில்கள் தயாரிக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் பொருட்களை கொள்முதல் செய்யும் பொழுது ஆன்லைன் பில் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், ஆன்லைன் பில் கொடுக்காமல் போலியாக பில் மற்றும் ரசீதுகளை தயாரித்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், சிறை கைதிகளிடமிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களை டெண்டர் அடிப்படையில் பல்வேறு அரசு துறைகளுக்கு சப்ளை செய்யப்படுவதில் போலியாக சிறை துறையில் உள்ள ஆவணங்களில் கணக்கு காட்டி மோசடி செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த வகையில் மதுரையில் பல்வேறு அரசு துறைகளுக்கு சிறை கைதிகள் தயாரித்த பொருட்களை அனுப்பிய விவகாரத்தில் ரூ1.63 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
மோசடி நடைபெற்ற காலத்தில் மதுரை மத்திய சிறையில் சூப்பிரெண்டண்ட் ஊர்மிளா, ஜெய்லர் வசந்த கண்ணன், நிர்வாக அதிகாரி இருந்த தியாகராஜன், பணம் கையாளும் விவகாரத்திலும் சிறை கைதிகள் பொருட்களை தயாரிப்பிலும், போலியாக ஆவணங்கள் பில்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார்கள் என தெரிய வந்துள்ளது.
மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து இந்த வழக்கு தொடர்பாக சென்னை, மதுரை மத்திய சிறை, வேலூர், கடலூர் உட்பட 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனையின் முடிவில் தான் எவ்வளவு போலி ரசீது தயாரிக்கப்பட்டது? எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டதுள்ளது? உள்ளிட்ட தகவல்கள் தெரியவரும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.