பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட காவலர் pt desk
தமிழ்நாடு

மதுரை | பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட காவலர் - நடந்தது என்ன?

மதுரை ஈச்சனேரி பகுதியில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அது சிவகங்கையில் பணிபுரியும் தனிப்படை காவலர் என உறவினர்கள் உறுதி செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: செ.சுபாஷ்

மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஈச்சனேரி பகுதியில் நேற்று மதியம் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கிடந்துள்ளது. சடலத்தை கைப்பற்றி பெருங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்ட அந்த சடலம் விருதுநகர் மாவட்டம் அழகாபுரி முக்குளத்தை சேர்ந்த மலையரசன் (36) என்பதும், இவர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் பணிபுரிந்த தனிப்படை காவலர் என்பதும் தெரியவந்தது.

முன்னதாக இவரது மனைவி பாண்டி செல்வி கடந்த 1ஆம் தேதி மானாமதுரை பகுதியில் வாகன விபத்தில் காயம் ஏற்பட்ட நிலையில், மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால். சிகிச்சை பலனின்றி கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து காவலர் மலையரசன், மனைவி மரணம் குறித்து சிந்தாமணி பகுதியில் உள்ள மருத்துவமனையில் ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வாங்குவதற்காக வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஈச்சனேரி பகுதியில் பாதி எரிந்த நிலையில் மலையரசன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மலையரசனின் உடலை உறவினர்கள் பார்த்து உறுதி செய்ததை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளியை கைது செய்யும் வரை சடலத்தை வாங்க மாட்டேன் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.