ஆட்டோ ஓட்டுநரை சுட்டுப் பிடித்த காவல்துறை pt desk
தமிழ்நாடு

மதுரை | போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ஆட்டோ ஓட்டுநரை சுட்டுப் பிடித்த காவல்துறை

மதுரையில் காவலர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஒருவரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர். பணத்திற்காக காவலர் கொல்லப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

PT WEB

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை விமான நிலையத்திற்குச் செல்லும் நெடுஞ்சாலை ஈச்சனேரி பகுதியில் கடந்த 18ம் தேதி பாதி எரிந்த நிலையில், விருதுநகரைச் சேர்ந்த மலையரசன் என்ற தனிப்படை காவலர் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பெருங்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இதையடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மதுரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், ஒருவரை சுட்டுப் பிடித்துள்ளனர். வில்லாபுரத்தை சேர்ந்த மூவேந்தர் என்ற ஆட்டோ ஓட்டுனரை துப்பாக்கியால் சுட்டுபிடித்த நிலையில் பணத்திற்காக காவலர் மலையரசனை எரித்துக் கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஆட்டோவில் காவலர் மலையரசன் சவாரி சென்றபோது ஏற்பட்ட பழக்கத்தில் இருவரும் சேர்ந்து பெருங்குடி அருகே மது அருந்தியுள்ளனர். அப்போது காவலர் மலையரசனிடம் பணத்தை பறித்த போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆட்டோ ஓட்டுநர், மணியரசன் தலையில் அடித்து கொலை செய்து எரித்து பெருங்குடி அருகே வீசிச் சென்றதும் தெரியவந்துள்ளது.

arrest

இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் மூவேந்தரை மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோடு பகுதியில் போலீசார், கைது செய்ய முயன்ற போது சார்பு ஆய்வாளர் மாரி கண்ணன் என்பவரின் கையில் வெட்டிவிட்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளார். இதையடுத்து மூவேந்தரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து மூவேந்தர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.