தமிழ்நாடு

உயிரை காவுவாங்கிய பாதாளச் சாக்கடை பள்ளம் - மதுரையில் பொதுமக்கள் சாலை மறியல்

webteam
மதுரை கூடல்நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக மந்த கதியில் நடைபெற்று வருகிறது.  இதற்காக தோண்டப்படும் பள்ளங்கள் முறையாக மூடப்படாத நிலையில், அவை மண் சாலைகளாக காட்சியளிப்பதோடு பள்ளங்களில் மழைநீர் தேங்கி மாணவர்கள், முதியவர்கள் பள்ளங்களில் விழுந்து காயம் ஏற்படுவது போன்ற அவல நிலை தொடர்ந்துவருகிறது. இந்நிலையில் மதுரை மாநகராட்சி 2ஆவது வார்டுக்குட்பட்ட கூடல்நகர் சொக்கலிங்க நகர் 1ஆவது தெரு பகுதியில் நடைபெற்ற பாதாள சாக்கடை பணியின்போது தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாத நிலையில் பள்ளத்தில் நேற்று பெய்த கனமழையால் மழைநீர் தேங்கியிருந்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு அதே பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் (45) என்ற நபர் அந்த வழியாக நடந்துவந்தபோது பாதாள சாக்கடை குழியில் விழுந்து நீண்டநேரமாக போராடியும் யாரும் இல்லாத நிலையில் மூச்சுத் திணறி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இதனையடுத்து இன்று காலை உயிரிழந்த நபரின் சடலத்தை எடுக்கவந்த மாநகராட்சி ஆம்புலன்ஸும் சகதியில் சிக்கி செல்லமுடியாத அவலம் ஏற்பட்டது. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் சாலையை சீரமைக்கக் கோரியும்,  உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்கக்கோரியும் பணியில் இருந்த ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு அலங்காநல்லூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இதேபோன்று தொடர்ந்து நடைபெற்று வருவதால் மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகள் முழுவதிலும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர்.