உடல்சார்ந்த பிரச்னைகளை கண்டறிய உதவும் ஸ்கேன் இயந்திரம் பல மாதங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்தால் என்னவாகும்?
மதுரை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை நாம் ஸ்கேன் செய்தால், அதிர்ச்சிக்குரிய பல தகவல்கள்
கிடைக்கின்றன.
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30... சமூக சுகாதார நிலையங்கள் 13... ஆரம்ப சுகாதார நிலையங்கள் 45 என மதுரை மாவட்டத்தில் 88 சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில் 13
நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 30 படுக்கை வசதிகள். அறுவை சிகிச்சை அரங்கம், ரத்த சேமிப்பு வங்கி. பேறுகால
பராமரிப்பு மையம், ஆய்வகம், ஸ்கேன் பரிசோதனை ஆகிய வசதிகள் உள்ளதாக கட்டமைக்கப்பட்டன. இதில் செக்கானூரணி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் செக்கானூரணி, கோகுலம் புதுப்பட்டி, புளியம்பட்டி, கன்னனூர், கோவிலாங்குளம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள்
பயன்பெற்று வருகின்றனர். 300க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வருகை புரிகின்றனர். செவ்வாய்க்கிழமை
தோறும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான பேறுகால மருத்துவ கவனிப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
அவ்வாறு ஓவ்வொரு வாரமும் சுமார் 200 கர்ப்பிணி பெண்கள் வருகை புரிகிறார்கள். அவர்களின் தேவை கருதி இரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கு 10 லட்சம் ரூபாய் செலவில் தமிழக
சுகாதாரத்துறை மூலம் அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் எந்திரம் புதிதாக நிறுவப்பட்டது. ஆனால் ஸ்கேன் இயந்திரத்தை இயக்க மருத்துவர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்படவில்லை, அதற்கு உண்டான தகுதி வாய்ந்த பணியாளர்கள் இல்லை என காரணங்கள் கூறி இரண்டு ஆண்டுகளாக அந்த ஸ்கேன் எந்திரம் பயன்படுத்தாமல் ஒரு அறையில் பூட்டிவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரத் துறை இயக்குனர் குமரகுருவை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஸ்கேன் பரிசோதனை செய்வதற்கு ஆறு மாத காலம் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் யாரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து பணி புரிவது கிடையாது எனத் தெரிவித்துள்ளார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு 15 நாள் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார். பயிற்சி பெற்றவர்கள் இல்லை என்பதால், பிற அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க பரிந்துரை செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.