தமிழ்நாடு

பாலமேட்டில் சீறிப் பாய்ந்த ஜல்லிக்கட்டு காளைகள் - பரிசுகளை அள்ளிய வீரர்கள்

பாலமேட்டில் சீறிப் பாய்ந்த ஜல்லிக்கட்டு காளைகள் - பரிசுகளை அள்ளிய வீரர்கள்

rajakannan

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது. 16 காளைகளை அடக்கிய பிரபாகரன் என்ற வீரருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.

வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகள். அதை விட வேகமெடுத்து காளைகளை அடக்கும் காளையர் என பாலமேடு ஜல்லிக்கட்டு அமர்க்களமாக காட்சியளித்தது. காலை 8.30மணியளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டுப்போட்டி மாலை 5 மணி வரை ஆரவாரமாக நடைபெற்றது. மதுரை மட்டுமின்றி திருச்சி, கோவை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நெல்லை, திருப்பூர், சிவகங்கை, விருதுநகர் என தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் 659 காளைகள் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றன. 675 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர்.

போட்டிக்கு முன் மாடுபிடி வீரர்களுக்கும்‌ காளைகளுக்கும், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், மாவட்ட ஆட்சியர் வினய், ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான மாணிக்கம், வருவாய்த் துறை அமைச்சர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில், மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியேற்றனர். கோவில் காளை வாடிவாசல் வழியே அவிழ்த்து விடப்பட, சுற்றுக்கு 75 வீரர்கள் வீதம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, அடக்கி தங்களுடைய வீரத்தை காளையர் பறைசாற்றினர்.

மாலை 4 மணி வரை போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 150க்கும் அதிகமான காளைகள் அவிழ்க்க வேண்டியிருந்ததால், அவகாசம் அரைமணி நேரம் நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் அரைமணி நேரம் நீட்டிக்கப்பட்டு 5 மணி வரை நடைபெற்றது. மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று கால நீட்டிப்பு செய்யப்பட்டதாக ஓய்வுப்பெற்ற நீதிபதி மாணிக்கம் அறிவித்தார். அதனால், மாடுபிடி வீரர்கள் உற்சாகமடைந்தனர்.

9 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், 16 காளைகளைப் பிடித்து மதுரை பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்ற வீரர் முதலிடம் பிடித்தார். 2ஆவது சுற்றில் இருந்து 8ஆவது சுற்று வரை விளையாடிய அய்யப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜா 13 காளைகளை பிடித்து 2ஆம் பரிசை பெற்றார். காயம் காரணமாக அவரால் 9ஆவது சுற்றில் விளையாட முடியவில்லை. கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் 10 காளைகளை அடக்கி 3ஆம் இடம் பிடித்தார்.

களத்தில் நின்று விளையாடிய திண்டுக்கல் மாவட்டம் எஸ்.காமாட்சிபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது காளை முதலிடம் பிடித்தது. அதற்கு, அலங்காநல்லூரைச் சேர்ந்த பொன்.குமார் காங்கேயம் பசுவையும், கன்றையும் பரிசாக வழங்கினார். புதிய தலைமுறையின் களம் காணும் காளைகள் நிகழ்ச்சியின் போது பாலமேடில் சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு கன்றும் பசும்வும் வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி பரிசு வழங்கினார். மதுரை செட்டியபட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரது காளை 2ஆவது இடத்தையும், பழங்காநத்தம் கார்த்திக்கண்ணன் காளை 3ஆவது இடத்தையும் பிடித்தன.