Madurai
Madurai pt desk
தமிழ்நாடு

”அரசியல் மாநாடுகளுக்கு மட்டும்தான் மதுரையா.. முதலீடு எதுவும் கிடையாதா?” - பட்டதாரி இளைஞர்கள் வேதனை!

webteam

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மதுரை மாவட்டத்திற்கு ஏதாவது வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்தால் மதுரை முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இளைஞர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறியதை விரிவாக பார்க்கலாம்...

global investors meet 2024

இது தொடர்பாக இளைஞர்கள் மற்றும் மதுரையைச் சேர்ந்தவர்கள் புதிய தலைமுறைக்கு அளித்துள்ள பேட்டியில், “ஆரம்ப காலத்தில் இருந்து இப்ப வரைக்குமே மதுரை தொழில் நகரமாகதான் இருந்திருக்கு. பிற்காலத்தில் தொழில் வளர்ச்சியடையாமல் சில பல காரணங்களால் தொழில் நலிவடைந்து விட்டது. இதற்கு அரசாங்க மாற்றமா? அல்லது மன்னர்களின் படையெடுப்பு உள்ளிட்ட காரணங்களால் தொழில் அழிந்துவிட்டதா?. ஆனால், மதுரை ஒரு காலத்தில் உலகளாவிய தொழில் வர்த்தக மையமாக இருந்திருப்பதாக தரவும் சொல்கிறது.

உலகளவில் உள்ள பல்வேறு முதலீட்டாளர்கள் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். அதுல வழக்கம்போல சென்னை, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்குதான் முதலீடுகள் வந்திருக்கிறது. ஆனால் மதுரைக்கு கொஞ்சமாவது கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்த்தோம். உற்பத்தி சார்ந்த தொழில்கள் வரவில்லை என்றாலும் சேவை சார்ந்த தொழிலாவது வரும் என்று நாங்கள் ரொம்ப எதிர்பார்த்தோம். ஆனால், எங்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டும்தான்.

madurai aiims

மதுரைக்கு எய்ம்ஸ், டைடல் பார்க், மெட்ரோ, அக்ரி யுனிவர்சிட்டி, செட்டிலைட் ப்ரோஜக்ட் உள்ளிட்டவைகள் அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது. பெரிய வருத்தமான விசயம் என்னன்னா சிப்காட் வராததுதான். அரசு நடவடிக்கை எடுத்து சிப்காட் கொண்டுவந்தால் ரொம்ப நல்லா இருக்கும். தென் மாவட்டத்தின் நுழைவு வாயிலாக இருப்பதே மதுரைதான். மதுரை வளர்ச்சியடைந்தால் அதை ஒட்டியுள்ள அனைத்து நகரங்களும் வளரும்.

அரசியல் ரீதியாக மதுரையை பயன்படுத்துறாங்களே தவிர, தொழில் ரீதியாக எந்தவித முக்கியத்துவமும் கொடுத்ததாக தெரியவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும் போது அரசியல் ரீதியாக பயன்படுத்தும் கட்சிகள் ஆளுங்கட்சியான பிறகு கண்டுகொள்வதே இல்லை. இது மிகப்பெரிய குறைபாடு. மத்திய மாநில அரசுகள் மதுரையை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறார்கள். ஆனால், சங்க காலம் மற்றும் இடைப்பட்ட காலங்களிலும் இங்கிருந்தான் வியாபாரம் செய்திருக்கிறார்கள். ஆனால் இப்போது தொழில் வேறு இடங்களுக்குச் சென்று விட்டதால் மதுரை முதியோர்கள் நகரமாக மாறிக்கொண்டுள்ளது” என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.