தமிழ்நாடு

நித்யானந்தா வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு

webteam

மதுரை ஆதீன மடத்துக்குள்‌ சென்று பூஜைகள் செய்ய காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி நித்யானந்தா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நித்யானந்தா தொடர்ந்த வழக்கில், மதுரை ஆதீன மடத்தின் ஆதீனமாக இருந்த அருணகிரிநாதர், தன்னை 293வது ஆதீனமாக 2012ல் நியமித்தார். இதையடுத்து மதுரை மடத்தில் ஆன்மீகப் பணிகளை மேற்கொண்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தைத் நடத்தி வந்தேன். எனது ஆன்மீக சேவைகளை தடுக்கும் நோக்கில் சிலர் மடத்துக்கு எதிராக பிரச்னைகளில் ஈடுபடுகின்றனர். எனவே மடத்திற்குள் சென்று கடமைகளை செய்ய, தனக்கு பாதுகாப்பு வழங்க விளக்குத்தூண் காவல் ஆய்வ‌ளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன் இரு தரப்பு வாதங்களையும் கேட்டார். பூஜை செய்வது, அன்னதானம் செய்வது என்ற பெயரில் மடத்திற்குள் நுழைந்து பிரச்னை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதால் நித்யானந்தாவிற்கு அனுமதி வழங்க கூடாது என ஆதீன தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி வழிபாடு நடத்தவும், அன்னதானம் செய்யவும் யாரும் தடை விதிக்க முடியாது என கூறினார். மேலும் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.