இசை போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவில் பெற்ற பரிசுத் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிய மதுரை சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மதுரை கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த தமிழ்மணி, ராஜலட்சுமி தம்பதியின் மகன் ப்ரணவ் (7). இந்த சிறுவன் சிறு வயது முதலே இசை மீது அதிக ஆர்வம் கொண்டதால், தனது மூன்று வயதிலிருந்தே டிரம்ஸ், பியானோ, கர்நாடிக் இசை, பறை உள்ளிட்டவைகளை முறைப்படி பயின்று வருகிறார்.
இந்நிலையில், தற்போது இசையமைப்பாளர் ஏஆர்.ரகுமான் இசை கல்லூரியில் இசை பயின்று வருகிறார். கடந்த ஆண்டு சட்டீஸ்கரில் தேசிய அளவில் நடைபெற்ற டிரம்ஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த சிறுவனுக்கு பரிசுத் தொகையாக 5,000, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இசை போட்டியில் பரிசாக கிடைத்த தொகை 5 ஆயிரம் ரூபாய் மற்றும் பெற்றோர்கள் கொடுத்த சிறுசேமிப்பாக உண்டியலில் சேர்த்து வைத்திருந்த ரூ. 5 ஆயிரத்தையும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரம் ரூபாயை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு கூகுள் பே மூலம் அனுப்பி வைத்துள்ளார். சிறுவனின் இந்த செயல் அனைத்து தரப்பினரின் வரவேற்பை பெற்றுள்ளது.