வாடிப்பட்டி பேரூராட்சியில் வெறிநாய் கடித்து பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. தற்போது அனைத்து வார்டுகளிலும் விரிவாக்கப்பட்ட பகுதிகளிலும் வெறிநாய் தொல்லை அதிகம் உள்ளது. கடந்த சில நாட்களாக வெறிநாய்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் கடித்துக் குதறி வருகிறது.
இந்நிலையில் வாடிப்பட்டி தாதம்பட்டி காலனி தெருவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான வடிவேலு என்பவரை வெறிநாய் கடித்துக் குதறியதில் ஆபத்தான நிலையில் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு வெறிநாய் கடிக்கு தங்க அனுமதி இல்லை என்று வீட்டிற்கு அனுப்பி வைத்ததால் செய்வதறியாது திகைத்த மாற்றுத்திறனாள வடிவேலுவின் பெற்றோர், தமிழக அரசும் வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகமும் உடனடியாக வெறிநாய் கடிக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த நிவாரணமும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
கடந்த சில நாட்களாக வயதான பாட்டி உட்பட சுமார் பத்துக்கும் மேற்பட்டோரை கடித்து வரும் வெறிநாயை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.