தமிழ்நாடு

மதுரை மீனாட்சியம்மன் கோயில் யானை பார்வதிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு: தீவிர சிகிச்சை!

webteam

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் யானை பார்வதிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உலக பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கோயில் திருவிழாவில் சுவாமி, அம்மன் வீதி உலாவின் போது சுவாமி முன்பாக செல்வதற்கு யானைகள் ஒட்டகம் மற்றும் பசு உள்ளிட்ட விலங்கினங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கடந்த 2000 ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து பார்வதி என்ற பெண் யானை வாங்கப்பட்டது. சுமார் 26 வயதான இந்த யானை, மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் யானை பார்வதிக்கு காலில் சிறிய அளவு காயம் ஏற்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து யானையின் உடல்நிலையில் கோயில் நிர்வாகம் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறை தரப்பில் எச்சரிக்கையும் வழங்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்தப் பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு மருத்துவ அறிக்கையானது தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த 2020 ஆம் ஆண்டு, பார்வதி யானைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அறிக்கையளித்தனர். அதைத்தொடர்ந்து அறிக்கையின் அடிப்படையில், யானையின் உடல்நலன் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பின் யானைக்கு இரண்டு கண்களிலும் கண்புரை ஏற்பட்டு, வெண்படலம் ஏற்பட்டதன் காரணமாக சென்னையில் இருந்து சென்ற மருத்துவ குழுவினரும் மதுரையில் உள்ள கால்நடை மருத்துவக் குழுவினர், தாய்லாந்து மருந்துவர்கள்  இணைந்து தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். இதனிடையே கோயில் யானை பார்வதிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

யானை பார்வதிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒருவாரமாக வயிற்றுபோக்கு ஏற்பட்ட நிலையில் சோர்வாக உள்ளதால் யானை நடைபயிற்சிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுரை கால்நடைத்துறை மருத்துவர்கள் மற்றும் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். யானை பார்வதி ஒரு வாரமாக எழுந்து நடக்கமுடியாத நிலையில் படுத்த நிலையிலயே இருப்பதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 4890 கிலோ எடை இருந்த யானை பார்வதி உடல்நலக்குறைவு காரணமாக உடல்எடை அதிகளவில் குறைந்துள்ளது. அண்மையில் அமைச்சர் சேகர்பாபு மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்று யானை பார்வதியின் உடல்நலம் குறித்து ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.