தமிழ்நாடு

`பாதுகாப்பு சாதனங்களின்றி தூய்மைப் பணியாளர்கள்?’- அறிக்கை வாயிலாக மதுரை மேயர் விளக்கம்

நிவேதா ஜெகராஜா

மதுரையில் பாதுகாப்பு சாதனங்கள் இன்றி தூய்மைப்பணியாளர்கள் வேலை செய்தது சர்ச்சையானது குறித்து, மாநகராட்சி மேயர் விளக்கமளித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி 59வது வார்டுக்கு உட்பட்ட ரயில்வே காலனி பகுதியில் மாஸ் கிளினிங் நிகழ்ச்சியை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி நேற்று முன் தினம் காலை தொடங்கி வைத்தார். அப்போது அங்கு சாலையில் நடுவே இருந்த கழிவுநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என அங்கு பணியில் இருந்த தூய்மை பணியாளரிடம் கூறி, அவர் கழிவுநீர் தொட்டியை திறந்து வாகனம் மூலமாக சுத்தம் செய்தபோது மேயர் மற்றும் திமுக கவுன்சிலர்கள், அதிகாரிகள் அருகில் நின்றப்படி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்த புகைப்படம் வெளியான நிலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர் கையில் கையுறை, காலில் செருப்பு, முக கவசம் எதுவும் இன்றி வெறும் கைகளை மட்டும் பயன்படுத்தி கழிவுகளை அள்ளுவதாகவும், மேயர் முன்பாகவே இது போன்று தூய்மை பணியாளருக்கான அவலம் அரங்கேறியதாகவும் கூறி பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தூய்மை பணியாளரை உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவுநீர் தொட்டியினை தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபடுத்தியதாக மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது தேசிய தாழ்த்தப்பட்ட ஆணைய தலைவர் மற்றும் துணைத்தலைவர், முதலமைச்சர் தனிப்பிரிவு, மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் கடிதம் மூலமாக புகார் மனு அளித்தார்.

இந்த விவகாரம் பூதாகாரமாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மதுரை மேயர் இந்திராணி, நேற்று முன்தினம் தேதியிட்ட ஒரு அறிக்கையை நேற்று இரவு வெளியிட்டார். அதில், `நேற்று (மே 28) காலை மண்டலம் 3 வார்டு எண் 59இல் ரயில்வே காலனி பகுதியில் சிறப்பு தூய்மை பணியினை துவக்கி வைத்து பணிகளை பார்வையிட்ட போது Desilting இயந்திரத்தை இயக்கும் தூய்மை பணியாளர் கையுறை, காலணி, பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் இருந்ததை கவனித்து, அவரிடம் பாதுகாப்பு உபகரணங்களுடன் பணி செய்ய வேண்டுமென வலியுறுத்தினேன். இதனை உடனடியாக விசாரித்து பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் இருந்ததற்கான தக்க விளக்கத்தை அளிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்கப்பட்டு உள்ளது.

அனைத்து தூய்மை பணியாளர்களும் தகுந்த உபகரணங்களை அணிந்து பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். மண்டல உதவி ஆணையாளர், உதவி செயற்பொறியாளர், சுகாதார அலுவலர் மற்றும் வார்டு உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் இதை பற்றிய போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும். மீண்டும் இவ்வாறான கவனக்குறைவான செயல் நேர்ந்தால் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக்கூறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சம்பவம் நடந்து 20 மணி நேரத்திற்கு பிறகு மதுரை மேயர் இந்திராணி தாமதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பது மீண்டும் அதிருப்தியையும், சர்ச்சையும் ஏற்படுத்தி உள்ளது.