தமிழ்நாடு

மதுரை: ஓட்டுக்கு பணம் புகாரில் 18 இடங்களில் ஐ.டி. ரெய்டு - ரூ.175 கோடி வரி ஏய்ப்பு அம்பலம்

kaleelrahman

மதுரையில் அரசு ஒப்பந்ததாரர் வெற்றிக்கு சொந்தமான 18 இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ. 175 கோடி வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது. மேலும் சில முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமமுகவின் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், உசிலம்பட்டி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மகேந்திரன் என்பவரின் சகோதரரும், அரசு ஒப்பந்ததாரருமான வெற்றி என்பவருக்கு சொந்தமான திரையரங்குகள், கட்டுமான நிறுவனம், பெட்ரோல் பங்க் உட்பட 18 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

மதுரை ஐராவதநல்லூரில் இயங்கிவரும் கட்டுமான நிறுவனம் வில்லாபுரத்தில் உள்ள வெற்றி சினிமாஸ் திரையரங்கம், பெட்ரோல் பங்க் மற்றும் தேனி, போடி உள்ளிட்ட இடங்களில் உள்ள வெற்றிக்கு சொந்தமான 18 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய சட்டவிரோதமாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 18 குழுக்களாக சென்று சோதனை நடத்தினர். அவர்களுடன் மதுரை மாநகர காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் 3 கோடி ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், 100 ஒப்பந்ததாரர்கள் உதவியுடன் 175 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வங்கி பணப் பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.