செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக்காளி தரப்புக்கும் திமுக முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமி தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதல்போக்கால் 21-க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், பிரபல ரவுடி வெள்ளைக்காளி காவல்துறையினர் என்கவுண்டர் செய்யவுள்ளதாகக் கூறி அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதனையடுத்து வெள்ளைக்காளி துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் திருமங்கலம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜரானார். இந்நிலையில், வெள்ளைக்காளியின் ஆதரவாளர் சுபாஷ் சந்திர போஸை மதுரை மாநகர காவல்துறையினர் என்கவுண்டர் செய்தனர். இதனையடுத்து வெள்ளைக்காளி ஆதரவாளர்கள் இருவர் சுபாஸின் என்கவுண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்த கடந்த சில தினங்களுக்கு முன்பாக மாவட்ட நீதிமன்றத்தில் கஞ்சா வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த நீதிபதிக்கே நீதிமன்ற வளாகத்தில் கொலை மிரட்டல் விடுத்தது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து பழிவாங்கல் நடைபெறும் என பழைய கொலை சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களை தமிழகம் முழுவதும் உள்ள வெள்ளைக்காளி ஆதரவாளர்கள் காவல் துறையினரையே அச்சத்திற்கு ஆளாக்கும் வகையிலும், சவால் விடுக்கும் வகையிலும் தங்களது சமூக வலைதளங்களில் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். அதன்படி வெள்ளைக்காளி பசங்கடா என்ற வசனத்துடன் விரைவில் ரெட் அலெர்ட் என எச்சரிக்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீசி அங்கு நிற்கும் நபரை ஆயுதங்களால் தாக்குவது போன்ற சிசிடிவி காட்சிகளை பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழாவில், நாளை முக்கிய நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்வழக்கு உள்ளவர்களை காவல்துறையினர் கைது செய்தாலும் கூட வெள்ளைக்காளியின் ஆதரவாளர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தபடி பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்பாக பதிவிட்டு வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் உருவாகியுள்ளது. எனவே இதுபோன்று சமூக வலைதள மூலமாகவே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கும் நபர்களை கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.