தமிழ்நாடு

மூட்டு சிகிச்சை மருத்துவமனையாக மாறிய புறக்காவல் நிலையம் - மதுரை அவலம்

webteam

மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையம் மருத்துவமனையாக மாற்றப்பட்ட அவலம் நடந்துள்ளது. 

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு வரும் நோயாளிகளின் விவரம், விபத்து, தற்கொலை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக வழக்கு விசாரணை நடத்தும் காவல்துறையினருக்கான புறக்காவல் நிலையம் இரண்டு அறைகளில் செயல்படுகிறது. இந்நிலையில், போதிய கட்டட வசதி இல்லாததால், மூட்டு நிவாரண நோயாளிகளுக்கான சிகிச்சை புறக்காவல்நிலையத்தில் அளிக்கப்படுகிறது. 

இதனால், மூட்டுவலிக்கு சிகிச்சை பெற வருவோர், சிகிச்சை அறையை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்படுகிறது. மேலும், காவல்துறையினருக்கும் போதிய அறை வசதி இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். தென்மாவட்ட மக்களுக்கு மருத்துவ சேவையை பூர்த்தி செய்யும் முக்கிய மருத்துவ மையமாக திகழும் மதுரை அரசு மருத்துவமனையில், கட்டட வசதி இல்லாமல் புறக்காவல் நிலையத்தில் மருத்துவமனை செயல்படுவது குறித்து மருத்துவமனை முதல்வர் வனிதாவிடம் கேட்டோம். பதிலளித்த அவர், வேறு அறைக்கு சிகிச்சைப் பிரிவு மாற்றப்படும் என உறுதியளித்தார்.