தமிழ்நாடு

மதுரை: மக்களின் வரவேற்பை பெற்றுள்ள வீடுதேடி வரும் காய்கறிகள் திட்டம்

மதுரை: மக்களின் வரவேற்பை பெற்றுள்ள வீடுதேடி வரும் காய்கறிகள் திட்டம்

kaleelrahman

மதுரை மாநகராட்சி சார்பாக நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலம் காய்கறி தொகுப்பு ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக நடமாடும் காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிகள் மூலமாக விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மதுரை மாநகராட்சி சார்பில் காய்கறிகள் வீடுகளில் கிடைத்திட 125 நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை நடைபெறுகிறது.

இதில், ஒரு தொகுப்பாக பையில் கத்திரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம், தக்காளி, தேங்காய், அவரைக்காய், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், புதினா கொத்தமல்லி, கருவேப்பிலை உள்ளிட்ட காய்கறி தொகுப்பு 100 ரூபாய்க்கு வார்டு வாரியாகச் சென்று வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தேவைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வழக்கமாக நடமாடும் காய்கறி விற்பனை செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மூலம் மாவட்ட நிர்வாகத்தின் உரிய அனுமதியோடு காய்கறி விற்பனை செய்யவும் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.