தமிழ்நாடு

அரசு மணல் குவாரிகளால் பொதுமக்கள் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? - நீதிபதிகள் கேள்வி

அரசு மணல் குவாரிகளால் பொதுமக்கள் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? - நீதிபதிகள் கேள்வி

rajakannan

திருச்சி, உன்னியூர் கிராமத்தில் புதிதாக மணல் குவாரி அமைக்க இடைக்கால தடை கோரிய வழக்கில் தமிழக பொதுப்பணித் துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் உன்னியூர்யை சேர்ந்த சுமதி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உன்னியூர் கிராமம் காவேரி ஆற்று படுகையில் உள்ளது. காவேரி ஆற்றை நம்பியே விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிலர் காவேரி ஆற்று பகுதியில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதி முழுவதும் முருங்கை விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளனர். காவேரி ஆற்று பகுதியில் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாத காரணத்தினால், கடந்த 1992 ம் ஆண்டு காவேரி ஆற்றில் இருந்து 160 மீட்டர் தொலைவில் விவசாயத்திற்கு கிணறு தொண்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து காவேரி ஆற்று பகுதியில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை உதவியுடன் எவ்வித விதியை பின்பற்றாமல், மணல் கடத்தல்கள் நடைபெற்றன. 

இது தொடர்பாக நீதிமன்றத்தில் பல பொதுநல வழக்குகள் தொடரப்பட்டு, விசாரணையின் இறுதியில் சில குவாரிகளை மூடவும், அளவுக்கு அதிகமாக மணல் அள்ளிய குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகளை வைத்து குவரிகளை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டது. இருப்பினும் கடந்த 2 ஆண்டுகளாக உன்னியூர் பகுதியில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் குவாரி செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அதன் அருகிலேயே புதிய குவாரி அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் உன்னியூர் பகுதியில் ஏற்கனவே, நிலத்தடி நீர் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் கிராம மக்கள் மிகவும் வறுமையில் உள்ளனர். இந்நிலையில் புதிதாக மேலும் ஒரு குவாரியை அமைப்பது கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே காவேரி ஆற்று பகுதியில் உன்னியூர் கிராமத்தில் புதிதாக மணல் குவாரி அமைக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என  கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி அமர்வு, அரசு மணல் குவாரிகளால் பொதுமக்கள் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர் என கேள்வி எழுப்பினர். பின்னர், மனு குறித்து தமிழக பொதுப்பணித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 6 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.