தமிழ்நாடு

மரங்கள் வெட்டப்படுவது குறித்து புகார் அளிக்க இலவச எண்கள் உண்டா? - நீதிமன்றம் கேள்வி

மரங்கள் வெட்டப்படுவது குறித்து புகார் அளிக்க இலவச எண்கள் உண்டா? - நீதிமன்றம் கேள்வி

webteam

மரங்கள்  வெட்டப்படுவது குறித்து தகவல் தெரிந்தால் புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்கள் உள்ளதா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

மதுரை செல்லூரைச் சேர்ந்த குபேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “காளவாசல் சந்திப்பில் இருந்து குரு தியேட்டர் சந்திப்பு வரை உள்ள அரசமரம், பூவரசம், நெட்டிலிங்க மரம் போன்ற பல வகை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. 138 மரங்கள் வெட்ட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரங்களை வெட்டாமல் பாலம் அமைக்க கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இல்லை. 

ஆகவே மரங்களை வெட்டுவது தொடர்பாக முறையான விதிகளை உருவாக்கவும், மரங்களை வேரோடு எடுத்து வேறு இடத்தில் நடும் நவீன இயந்திரங்களை பயன்படுத்தவும் உத்தரவிட வேண்டும். விதிகளை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். மேலும் பல்வேறு நவீன திட்டங்களுக்காக அழிக்கப்படும் மரங்களுக்கு ஈடாக குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் காடு வளர்ப்பை அதிகப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. பாலம் அமைக்கும் பணிக்காக இதுவரை 80 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார். அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், இந்த பாலம் அமைக்கும் பணிக்காக இது வரை 200க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள், மரங்கள் வெட்டப்படுவது குறித்து தகவல் தெரிந்தால் ஆதாரங்களுடன், பொது மக்கள் புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்கள் உண்டா எனவும் மரங்களை தனி நபர்கள் தத்தெடுத்து பராமரிப்பதற்கு ஏதேனும் சாத்தியக்கூறுகள் உண்டா எனவும் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.