தமிழ்நாடு

உண்டியல் பணத்தை அதிகாரி திருடிய சம்பவம்: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு

webteam

சுந்தரமகாலிங்கம் கோவில் உண்டியல் பணத்தை திருடிய அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 21 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும், தவறினால் 23 ஆம் தேதி நேரில் ஆஜராகவும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை சோலைஅழகுபுரத்தை சேர்ந்த சோலைகண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 20.08.13 அன்று இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட பேரையூரில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்களால் கோவில் பணிக்காக வழங்கப்பட்ட உண்டியல் காணிக்கை முறைப்படி உடைத்து எண்ணப்பட்டது. இந்தப் பணிகள் கோவிலின் செயல் அலுவலர் மற்றும் அப்போதைய திருப்பரங்குன்றம் துணை ஆணையராக இருந்தவரும், தற்போது மதுரை மண்டல இணை ஆணையராக இருப்பவருமான பச்சையப்பன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

21 ஆம் தேதி அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தில் ஒரு ஆயிரம் ரூபாயை மண்டல துணை ஆணையர் பச்சையப்பன் கர்ச்சீப்பை போட்டு திருடிச்சென்றார். இந்தக் காட்சிகள் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதால் கோவிலின் செயல் அலுவலர் கடந்த 23.08.14 அன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இணை ஆணையர் பச்சையப்பனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் பல நாளிதழ்களில் வெளியான நிலையில், பச்சையப்பன் மீது காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுக்காமல் உள்ளனர். இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். எனவே, சுந்தரமகாலிங்கம் கோவில் உண்டியலில் பக்தர்களின் காணிக்கை பணத்தை திருடியதால் இணை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவிலின் செயல் அதிகாரி கொடுத்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என கோரியுள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு, உண்டியலை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிகாரி பச்சையப்பன் மீதான வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 21 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும், தவறினால் நேரில் ஆஜாராகவும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.