தமிழ்நாடு

அடையாளத்தை வெளியிட்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை

அடையாளத்தை வெளியிட்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை

rajakannan

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்டதற்கு இழப்பீடு 
வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை பிறப்பித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தொடர்பான வழக்கினை சிபிஐக்கு மாற்ற பரிந்துரை செய்து நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், அந்த அரசாணையில் விதிமுறைகளை மீறி பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனையடுத்து திருச்சியைச் சேர்ந்த இளமுகில் என்பவர் இது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில், “பாலியல் வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை மற்றும் நீதிமன்ற ஆவணங்கள், ஊடகங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை வெளியிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறினால் இந்திய தண்டனைச் சட்டம் 228 ஏ பிரிவின் கீழ 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். அண்மையில் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் புகார் அளித்த பெண்ணின் அடையாளத்தை எஸ்பி வெளியிட்டார். இதன் விளைவாக அப்பெண்ணின் சகோதரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 

இதனால் பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவில் முடித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும், பாலியல் வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு விசாரணைப்படை அமைக்கவும், பாலியல் வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்களை பின்பற்றவும், சமூக வலைதளங்களில் பாலியல் உள்பட கொடூரமான குற்றங்களில் தொடர்புடைய வீடியோக்கள், புகைப்படங்கள், ஒலிப்பேச்சுகளை வெளியிட தடை  விதித்தும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் எஸ் எஸ் சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த  நீதிபதிகள், வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை திரும்பப் பெற்று பாதிக்கப்பட்டவரின் அடையாளமின்றி புதிதாக அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். நீதிபதிகள் அளித்த உத்தரவின் நகல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த உத்தரவில், ‘அடையாளத்தை வெளியிட்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

மேலும், “விவகாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. துணிச்சலாக முன்வந்து புகார் அளித்த அந்தப் பெண்ணின் அடையாளத்தை விதிகளும் உத்தரவுகளும் இருந்தும் வெளியிட்டது ஏன்?. இவ்வாறு செய்தால் இது தொடர்பாக புகார் அளிக்க யார் முன்வருவர்?” என கேள்வி எழுப்பினர். 

பொள்ளாச்சி விவகார வீடியோ பல லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருகிறது. இது சமூக பாதிப்பை ஏற்படுத்தும், தவறு செய்யத் தூண்டும் என மனநல மருத்துவர் ஷாலினி தெரிவித்துள்ளார். ஆகவே பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான வீடியோக்களை தடை செய்ய வேண்டும். இதற்காக இணைய சேவை வழங்குவோர் சங்க செயலாளரை நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிடப்படுகிறது.

 இணையம் தொடர்பான நன்மை தீமைகளை அறியும் விதமாக விழிப்புணர்வுகளை முன்னெடுக்கவேண்டும். செல்போன் மக்களின் வாழ்வில் ஒரு அங்கமான நிலையில் மத்திய மாநில அரசுகள் அதனை பாடமாகக் கொண்டுவர முயற்சி எடுக்க வேண்டும். 

குடும்பத்தில் பெண் குழந்தைகளுக்கு போதிய அன்பும் அக்கறையும் காட்டப்படாததே இது போன்ற சிக்கல்களில் அவர்கள் எளிதாக சிக்க காரணம் ஆகிறது. இவற்றை கருத்தில் கொண்டு பொள்ளாச்சி வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை திரும்பப் பெற்று பாதிக்கப்பட்டவரின் அடையாளமின்றி புதிதாக அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. பொள்ளாட்சி சம்பவத்தில் புகார் அளித்த பெண்ணின் அடையாளம் வெளியாகும் வகையில், அரசாணை வெளியிட்டதால், அந்த பெண்ணுக்கு இடைக்கால இழப்பீடாக  25 லட்ச ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும். 

வழக்கு விசாரணையின் தொடக்கத்திலேயே 4 பேர் மட்டுமே குற்றவாளிகள், 4 வீடியோக்கள் மட்டுமே வெகியாகியுள்ளன என தெரிவித்த காவல் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்களை இணையதளங்களில் இருந்து நீக்க மத்திய அரசுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான வீடியோக்களை புகைப்படங்களை வைத்திருப்பதும் பகிர்வதும் குற்றம். இதுதொடர்பாக தமிழக அரசு விரிவான விளம்பரம் செய்ய வேண்டும். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரம்பிற்கு அப்பாற்பட்டது என்பதால் இந்த வழக்கை யார் விசாரிக்கலாம் என்பதை சென்னை உயர் நீதிமன்ற முதன்மை நீதிபதி முடிவு செய்வார்” என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.