தமிழ்நாடு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்தது செல்லாது: உயர்நீதிமன்றம்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்தது செல்லாது: உயர்நீதிமன்றம்

rajakannan

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டது செல்லாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி தேர்வை ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பிப்ரவரி 9ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சிவகங்கையைச் சேர்ந்த இளமதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தான் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், குறிப்பிட்ட சிலர் செய்த தவறுக்காக மொத்தத் தேர்வையும் ரத்து செய்‌வது ஏற்புடையதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 எனவே எழுத்துத் தேர்வில் தான் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் விரிவுரையாளராக நியமிக்கவும், அது வரை ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறைச் செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில், வழக்கு நீதிபதி சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டது செல்லாது என நீதிபதி உத்தரவிட்டார். தவறு செய்த 200 பேரை கண்டறிவது எளிதானது என்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறு செய்தவர்களை தவிர மற்றவர்களின் மதிப்பெண்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் தாக்கல் செய்த பதில் மனுவில், விடைத்தாள் மதிப்பீட்டிற்காக தனியார் ஏஜென்சி கொண்டு சென்றபோதுதான் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், எழுத்துத் தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.