தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவு

webteam

தூத்துக்குடி துப்பாக்கிசூடு விவகாரம் தொடர்பாக சிபிஐ நடவடிக்கை குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அது தொடர்பாக சிபிஐ இயக்குநர் சார்பாக சிறப்பு குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ரவி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், துப்பாக்கிசூடு விவகாரம் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, ஏற்கனவே வழங்கப்பட்ட காலத்தை நீட்டித்து ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ இயக்குநர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள், துப்பாக்கிச் சூடு தொடர்பாக இன்னும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டுமென்பதால் கால அவகாசம் வேண்டுமென கேட்டுக்கொண்டார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சி.பி.ஐ விசாரணைக்கு நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் முடிந்து 6 மாதத்திற்கு மேல் ஆகியுள்ளது. எனவே மீண்டும் கால அவகாசம்  தேவையில்லை என்று வாதிட்டார். 

இதனைத்தொடர்ந்து நீதிபதிகள் சி.பி.ஐ விசாரணை சம்பந்தமாக குறிப்பிட்ட கால அவகாசம் நிர்ணயம் செய்ய முடியாது என பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. ஆகையால் இந்த வழக்கிலும் விசாரணை முடிப்பதற்கு கால அவகாசம் நிர்ணயம் செய்யமுடியாது என உத்தரவிட்டனர். மேலும் சி.பி.ஐ. தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை செப்டம்பர் 15 ம் தேதி தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.