தமிழ்நாடு

இனி குடிக்க மாட்டேன் என பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

JustinDurai
இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால், ஜாமீன் வழங்குவதாக கூறியுள்ளார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி.
திருச்சியைச் சேர்ந்த சிவா மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், "கடந்த ஜூலை 25ஆம் தேதி நண்பர்கள் சுரேஷ், பாண்டியன் உள்ளிட்டோருடன் சேர்ந்து மது அருந்திய போது, வாய் தகராறு ஏற்படவே, பீர் பாட்டிலால் சுரேஷை தாக்கியதாக எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பொய்யாக பதிவு செய்யப்பட்ட வழக்கு. கணக்கு காண்பிக்கும் நோக்கில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
37 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நிலையில், கீழமை நீதிமன்றத்தில் ஜாமின் கோரிய வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறோம். ஆகவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மது அருந்தியதன் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆகவே மனுதாரர்கள் இருவரும் இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால், ஜாமீன் வழங்குவதாக கூறி வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.