தமிழ்நாடு

சசிகலா புஷ்பா - ராமசாமி திருமணத்துக்கு தடை: குடும்பநல நீதிமன்றம்

சசிகலா புஷ்பா - ராமசாமி திருமணத்துக்கு தடை: குடும்பநல நீதிமன்றம்

webteam

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்பி  சசிகலா புஷ்பா, ராமசாமி என்பவரை திருமணம் செய்ய மதுரை குடும்பநல நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்பி சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன், பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா புஷ்பா போட்டியிடப் போவதாகக் கூறி மனுத்தாக்கல் செய்ய வந்தார். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகளுக்கும், சசிகலா புஷ்பாவின் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன் கடுமையாக தாக்கப்பட்டார். இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்துக்குப் பிறகு அரசியல் மற்றும் பிற விவகாரங்களிலிருந்து ஒதுங்கியே இருந்தார் சசிகலா புஷ்பா. இதற்கிடையே சசிகலா புஷ்பாவிற்கும், அவரது கணவருக்கும் முறைப்படி விவாகரத்தானது. 

இதனைத் தொடர்ந்து சசிகலா புஷ்பாவுக்கும்,டெல்லியைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக சமூக வலைத்தளங்களில்  தகவல் வெளியாகியது. அதில் டெல்லியில் வரும் 26ஆம் ராமசாமி என்பவரை சசிகலா புஷ்பா திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் மாப்பிள்ளையான ராமசாமி ஓரியண்டல் தொழில்நுட்ப நிறுவனப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில்தான் சத்யபிரியா என்பவர்  தனது குழந்தையுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், டெல்லி ராமசாமி தனது கணவர் என்றும் தனக்கும் அவருக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது எனவும் கூறி வழக்கு தொடர்ந்தார். சத்தியப்பிரியா தொடர்ந்த வழக்கில் டெல்லியைச் சேர்ந்த ராமசாமி வேறு பெண்ணை திருமணம் செய்ய மதுரை குடும்பநல நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதனால் எம்.பி. சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்ய சிக்கல் எற்பட்டுள்ளது.