தமிழ்நாடு

`விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மத நல்லிணக்கம் பாதிக்கக்கூடாது’- உயர்நீதிமன்ற கிளை

நிவேதா ஜெகராஜா

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் விநாயகர் சதுர்த்தி பண்டிகை பெரிய அளவில் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி அடுத்த சில நாள்களுக்கு நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், கொண்டாட்டங்களை நடத்தவும் இந்து அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கும் ஊர்வலம் செல்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது. சென்னையில் விநாயகர் சிலைகளை கரைக்க 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

விநாயகர் சிலைகளை வைப்பதற்கும் ஊர்வலமாக கொண்டுசெல்வதும் அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளைதான், மேற்கூறிய அனுமதியை வழங்கியுள்ளது. அந்த அனுமதியுடன் சேர்த்து, கீழ்வரும் அனுமதிகளும் கட்டுப்பாடுகளும் கூடவே விதிக்கப்பட்டுள்ளது.

`விநாயகர் ஊர்வலத்தின் போது ஆபாச நடனமோ, வார்த்தைகளோ இடம்பெறக்கூடாது.

எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது சமூகம் அல்லது சாதியை குறிப்பிட்டு நடனம் அல்லது பாடல்கள் இசைக்கப்படக்கூடாது.

எந்த அரசியல் கட்சிக்கும் அல்லது மதத் தலைவருக்கும் ஆதரவாக ஃப்ளெக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது.

மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையிலான நிகழ்வுகள் இருக்க கூடாது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் போதை பொருட்களையோ, மதுபானங்களையோ உட்கொள்ளக்கூடாது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், மனுதாரர்களும் மற்றும் விழா ஏற்பாட்டாளர்களுமே பொறுப்பாவார்கள்

நிபந்தனைகள் மீறப்பட்டால் விழாவை நிறுத்த காவல்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கிறது”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையொட்டி விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சென்னை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் 3,200 சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழங்கியுள்ள விதிமுறைகளை மீறியோ, அனுமதி பெறாமலோ சிலைகள் வைப்பவர்கள் மீத நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். விநாயகர் சிலைகளை கரைக்க சென்னை காவல் மாவட்டத்திற்குள் திருவொற்றியூர், காசிமேடு துறைமுகம், பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை ஆகிய 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக அந்தந்த பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், விழா நடத்தவும் மாநகராட்சி, காவல்துறை மற்றும் மின்சார வாரியத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும் என்பது விதி ஆகும். அந்த வகையில் சென்னையில் இதுவரை 2,000 சிலைகளுக்கும், தாம்பரத்தில் 700 சிலைகளுக்கும், ஆவடியில் 500 சிலைகளுக்கும் என மொத்தம் 3200 சிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 992 சிலைகள் தற்போது வரை ஒதுக்கப்பட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவம் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 அடிக்கு மிகாமல் சிலை இருக்க வேண்டும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் தயாரிக்கப்பட்ட சிலைகள் பயன்படுத்தக் கூடாது, ரசாயனப் பூச்சு பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதால், வழிகாட்டுதல்களை மீறியோ, முறையான அனுமதி பெறாமலோ சிலைகளை வைத்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்காக சென்னையில் சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள திருவல்லிக்கேணி, தி.நகர், ஜாம்பஜார் உள்ளிட்ட பதற்றமான பகுதிகளில் அந்தந்த காவல் மாவட்டத்தின் இணை ஆணையர் தலைமையில் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

4 ஆம் நாள் சிலைகளை கரைக்க சென்னை காவல் மாவட்டத்தினுள் திருவொற்றியூர், காசிமேடு துறைமுகம், பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை என 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் 5,200 சிலைகள் வைக்கப்போவதாக 65 இந்து அமைப்பினர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2,000 சிலைகளுக்கு மட்டுமே தற்போது வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.