கரூரில் ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ள கோவில் நிலத்தின் சந்தை மதிப்பு எவ்வளவு என அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம் தாந்தோணி கிராமத்தில் வெங்கட்ரமண சுவாமி கோவில் நிர்வாகத்திற்கு 16 ஹெக்கர் புஞ்சை நிலம் இருந்துள்ளது. இந்த நிலத்தில் அனுமதியின்றி, சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் 15 ஆண்டுகளுக்கு முன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு, செயல்பட்டு வருவதாக, கோவில் நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வருவாய்த் துறை, நில நிர்வாகம், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர்களின் ஆலோசனைப்படி ரூ.1.31 கோடி இழப்பீடு வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதை எதிர்த்து வாதம் செய்த கோவில் நிர்வாகத்தின் தரப்பு, கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.212 கோடியே 78 லட்சத்து 19 ஆயிரத்து 520 ரூபாய் என்று கூறப்பட்டது. அத்துடன் அந்த தொகையே மாவட்ட நிர்வாகம் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ள நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். மேலும் வழக்கை மார்ச் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.